பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 131

வேண்டிய முறையும் அறியேன். இக் காட்டிற் செல்வதற்கான வழியும்
அறியேன் என் தாய் தன் கையால் காட்டிய முறைப்படி செய்ய அறியேன்.
தாயும் என்னை விலக்கி வைத்துத் தான் மட்டும் தனித்துப் போய்ச் சேர்ந்து
விட்டாள்.

 
            110
காய்முதிர் கனியி னூழ்த்துக்
     கனிந்துவீ ழிம்மெய் வாட்டி
வேய்முதிர் வனத்தி னோன்பின்
     வித்தினால் விளைமெய்ஞ் ஞான
மாய்முதி ருவப்பி லுள்ளத்
     தாண்டகை ஒருவ னாள
நோய்முதி ருலக நீக்க
     னுதல்வரு மினிமை தானே.
 
''காய் முதிர் கனியின் ஊழ்த்துக் கனிந்து வீழ் இம் மெய் வாட்டி,
வேய் முதிர் வனத்தில் நோன்பின் வித்தினால் விளை மெய்ஞ்ஞானம்
ஆய் முதிர் உவப்பில், உள்ளத்து ஆண்டகை ஒருவன் ஆள,
நோய் முதிர் உலகம் நீக்கல் நுதல்வு அரும் இனிமை தானே.

     ''காயாய் இருந்து முதிர்ந்த கனியைப் போலப் பதமிழந்து
முதுமையுற்று விழுந்து போகும் இயல்புள்ள இவ்வுடலை வாட்டி, மூங்கில்
முதிர்ந்த காட்டில் தவம் என்னும் வித்தினால் விளையும் மெய்ஞ்ஞானத்தை
ஆராய்கின்ற முதிர்ந்த மகிழ்ச்சியோடு, உள்ளத்தில் ஆண்டவன் ஒருவனே
இருந்து ஆட்சி செய்யுமாறு, துன்பம் நிறைந்த உலகத்தை விடுதல் கருதுதற்கு
அரிய இன்பமே ஆகும்.

 
           111
ஊக்கவேர் பூட்டி நோன்பா
     லுடற்செறு வுழுது நன்றி
வீக்கமேல் விரதச் செந்நெல்
     வித்திநல் லொழுக்க நீரைப்
போக்கநீ டிறைத்துத் தன்னைம்
     பொறியெனும் வேலி காக்கி
லாக்கமாய்ப் பெரும்வீட் டின்ப
     மண்டமேல் விளைக்குந் தானே.