பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 132

''ஊக்க ஏர் பூட்டி, நோன்பால் உடல் செறு உழுது, நன்றி
விக்க மேல் விரதச் செந்நெல் வித்தி, நல்லொழுக்க நீரைப்
போக்க நீடு இறைத்து, தன் ஐம் பொறி எனும் வேலி காக்கில்
ஆக்கமாய்ப் பெரும் வீட்டு இன்பம் அண்டமேல் விளைக்கும் தானே.


     ''ஊக்கம் என்னும் ஏரைப் பூட்டி, தவம் என்னும் கொழுவினால் உடல்
என்னும் வயலை உழுது, நன்மை மேலே மிகுமாறு கொள்கைப் பிடிப்பு
என்னும் நெல்லை விதைத்து, நல்லொழுக்கம் என்னும் நீரை எங்கும்
செல்லுமாறு நீடிக்க இறைத்து, தன் ஐம் பொறிகளை அடக்குதலாகிய
வேலியால் காத்துக் கொண்டால் அதன் ஆக்கமாய்ப் பெருமையுள்ள
வான்வீட்டு இன்பத்தை வானுலகில் தப்பாது விளைவிக்கும்.

     தவம் என்னும் கொழு, அடக்குதலாகிய வேலி எனப் பாடற் பொருள்
பொருந்த விரிக்கப்பட்டது.

 
               112
ஆயினும் வயதோர் நான்கு
     மாகுமுன் றனித்த நானே
வீயினுங் கொடிய பேய்கள்
     வினைசெய வொருபா லோர்பாற்
பேயினுங் கொடிய தன்மெய்
     பெரும்பகை செயவிவ் வாயிற்
போயினும் வழுவா செல்லல்
     புணர்வரி தறத்தி னாறே.
 
''ஆயினும், வயது ஓர் நான்கும் ஆகும் முன் தனித்த நானே
வீயினும் கொடிய பேய்கள் வினை செய ஒரு பால், ஓர் பால்
பேயினும் கொடிய தன் மெய் பெரும் பகை செய, இவ் வாயில்
போயினும், வழுவா செல்லல் புணர்வு அரிது அறத்தின் ஆறே.

     ''அவ்வாறு இருப்பினும், நான்கு வயதும் ஆகுமுன் தனிப்பட்ட நான்
ஒரு பக்கம் சாவைக் காட்டிலும் கொடிய பேய்கள் தீவினை உணர்வுகளைத்
தூண்டிக் கொண்டிருக்கவும், மற்றொரு பக்கம் அப்பேயைக் காட்டிலும்
கொடிய தன் உடல் அவற்றில் ஈடுபடலாகிய பெரும் பகையைச் செய்து
கொண்டிருக்கவும், இந்தத தவ வாயில் வழியாகச் சென்றாலுமே, அற
நெறியில் வழுவாது செல்லுதல் என்பது அமைவதற்கு அரியதாகும்.