பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 133

     பேய் புறப்பகையாதலின், உட்பகையாகிய மெய் அதனினும் கொடிய
பெரும் பகை எனப்பட்டது. 110ஆம் பாடலிற் கூறப்பட்ட உலகம்,
இப்பாடலிற் கூறப்பட்ட பேய் உடல் என்ற இரண்டோடு ஆன்ம வாழ்வில்
முப்பகையாய் அமையும்.

 
                 113
தன்முகம் படிக மின்றித்
     தரணியிற் காண்பா னில்லை
பன்முகங் காட்டு மின்பம்
     பற்றலிற் றிரிதந் நெஞ்சந்
துன்முகந் தம்மிற் றாமே
     துகளற வெவருங் காணார்
வின்முகங் காட்டு நூலோர்
     வெயிற்பளிங் கின்றி யன்றோ.
 

''தன் முகம் படிகம் இன்றித் தரணியில் காண்பான் இல்லை.
பல் முகம் காட்டும் இன்பம் பற்றலில் திரி தம் நெஞ்சம்
துன்முகம் தம்மில் தாமே துகள் அற எவரும் காணார்,
வில் முகம் காட்டும் நூலோர் வெயில் பளிங்கு இன்றி, அன்றோ?


     ''உலகத்தில் கண்ணாடி இல்லாமல் தன் முகத்தைக் காணக் கூடியவன்
இல்லை அதுபோலவே, அறிவு ஒளியின் தன்மையைக் காட்டும் அறநூலோர்
தந்த ஒளியுள்ள கண்ணாடியின் துணை இல்லாமல், உலகம் பல வகையாகக்
காட்டும் இன்பத்தைப் பற்றிக் கொள்ளும் முயற்சியில் அலைந்து திரியும் தம்
மனம் சார்ந்து நிற்கும் வகையை எவரும் தாம் தாமே குற்றமறக் கண்டறியார்
அல்லவா?

 
                  114
மொய்யொடு கடுத்த கோப
     முதிரற நீதி யென்ன
மெய்யொடு விளைந்த காமம்
     விழுமனக் கேண்மை யென்ன