பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 135

     ''இவ்வாறு நான் ஒருவனாய்த் தனித்து, இடறி விழாமல் அற நெறியில்
ஒழுகும் தன்மையோ, அதனை நெருங்கிச் செல்லும் வழியில் இடறி
விழுந்தால் துணைவனாய் நின்று தூக்கியெடுத்து, 'பின்னடையாமல் முன்
சொன்னபடி நட' என்றோ சொல்லக் கூடிய அரிய குரு ஒருவன் இல்லாது
நிற்பேனோ?'' என்று இள முனிவனாகிய கருணையன் ஆற்றில்
பாய்ந்தோடும் வெள்ளம் போல அழுது சொன்னான்.

     'சொல்லக் கூடிய' என ஒரு தொடர் வருவிக்கப்பட்டது.

 
            116
நவமணி வடக்க யிற்போ
     னல்லறப் படலை பூட்டுந்
தவமணி மார்பன் சொன்ன
     தன்னிசைக் கிசைகள் பாடத்
துவமணி மரங்க டோறும்
     துணரணி சுனைக டோறு
முவமணி கானங் கொல்லென்
     றொலித்தொலித் தழுவ போன்றே.
 
நவ மணி வடக் கயில் கோல், நல் அறப் படலை பூட்டும்
தவம் அணி மார்பன் சொன்ன தன் இசைக்கு இசைகள் பாட
துவம் அணி மரங்கள் தோறும் துணர் அணி சுனைகள் தோறும்
உவம் அணி கானம் கொல்லென்று ஒலித்த அழுவ போன்றே.

     ஒன்பது வகை மணிகளால் செய்த வடங்களின் பூட்டுவாய் போல்
நல்ல அறங்களாகிய படலை மாலையை இணைத்துப் பூட்டும் தவத்தை
அணிந்த மார்பை உடையவனாகிய கருணையனின் சோக இசைக்கு ஏற்பத்
தாமும் இசை பாடக் கருதி, தவம் அணிந்த அக் காட்டிற் கொல்லென்று
ஒலித்து ஒலித்து, அசையாநிலை கொண்ட மரங்கள் தோறும்
பூங்கொத்துக்களை அணியாகக் கொண்ட தடாகங்கள் தோறும் பறவைகளும்
வண்டுகளும் அழுவன போல் தோன்றியன.

     முன் 98 ஆம் பாடலிற் கண்டபடி வாய் திறவாமல் கேட்டுக்
கொண்டிருந்த பறவைகளும் வண்டுகளும் இப்பொழுது கொல்லென்று
இரைந்து ஒலித்தன. உவம் தவத்தைக் குறிக்கும் உவ்வு என்ற சொல்
சாரியை பெற்று உவ்வம் என்று ஆகி, பின் இடைக் குறையாக உவம் என
நின்றது.