பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 137

படம் புனைந்து எழுதிய பாங்கின், பங்கயத்
தடம் புனைந்து, இளமுனி சாற்றுகின்ற எலாம்,
வடம் புனைந்தெனப் புனைமறை நல்லோர் எசித்து
இடம் புனைந்து, இருள் அற உணர்ந்து இரங்கினார்


     அழகாய் வரைந்த படத்தின் தன்மையாய், அத்தாமரைத் தடாகத்திற்கு
அழகு தந்து, இள முனிவனாகிய கருணையன் இங்கே சொல்லுகின்றவற்றை
எல்லாம், மணிவடம் அணிந்த தன்மையாய் வேதத்தை அணிந்த
நல்லோராகிய திருக்குடும்பத்தினர் எசித்து நாட்டில் அழகாக
அமர்ந்திருந்தே, தம்முன் நடப்பதுபோல் மறைப்பின்றி உணர்ந்து மனம்
இரங்கினர்.

     சாற்றுகின்ற + எலாம் - சாற்றுகின்றவெலாம் என வர வேண்டியது
'சாற்றுகின்றெலாம்' எனத் தொகுத்தல் விகாரம் கொண்டது.

 
             119
இரங்கிய தன்மையி னுதவி யீந்தரு
ளரங்கிய நாயக னாங்க டர்ந்துசூழ்
குரங்கிய அம்பரை விளித்துக் குட்டனுக்
குரங்கிள ருறுதிக ளுரைப்ப வோதினான்.
 
இரங்கிய தன்மையின் உதவி ஈந்து அருள்
அரங்கிய நாயகன் ஆங்கு அடர்ந்து சூழ்
குரங்கிய உம்பரை விளித்து, குட்டனுக்கு
உரம் கிளர் உறுதிகள் உரைப்ப ஓதினான் :

     மூவரும் இரங்கிய தன்மையினிடையே, அருளால் அழுந்திய
ஆண்டவனாகிய குழந்தைநாதன் கருணையனுக்கு உதவி ஈந்த தன்மையாய்த்
தன் பக்கம் திரண்டு சூழ்ந்து வணங்கிய வானவரை அழைத்து, போய்
அச்சிறுவனுக்கு உரைக்குமாறு வலிமையளிக்கக் கூடிய உறுதி மொழிகளைக்
கூறினான் :

 
                           120
பேர்ந்தபூ கரையின்மேல் வாடும் பெற்றியா
லார்ந்தபூந் தடங்கரைக் கயர்ந்து துஞ்சியுட்
கூர்ந்தநோ யலைவுகொள் குழவி தன்மையிற்
றேர்ந்தமா முனிமனந் தேற்றச் சென்மினே.