பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 139

''செருக்கிடைக் கோடு உளம் சிதைக்கும் ஐம் பொறிப்
பெருக்கிடைப் பெரும் பகை பெறும் யாக்கையை,
முருக்கு இடைத் துறவற முயற்சி வேண்டுவர்
நெருக்கு இடைத் தோல் உரித்த அரவு நேருவார்.


     ''அகந்தையினால் நெறி தவறுகின்ற இயல்புள்ள உள்ளத்தைச்
சிதைக்கக் கூடிய ஐம்பொறிகள் தூண்டும் ஆசைப் பெருக்கினிடையே
தனக்குப் பெரும் பகையைப் பெற்றுள்ளது உடல். அதனை வாட்டி
வழிப்படுத்துவதற்கு இடமாக அமைந்துள்ளது துறவற முயற்சி. அம்முயற்சியை
நாடுவோர் இந்நெருக்கத்தினிடையே, தன் மேல் சட்டைத் தோனை உரித்துக்
கொள்கின்ற பாம்புக்கு நிகராகத் தம் உறவுகளையெல்லாம் களைந்து எறிவர்.

     பாம்பு தோல் உரித்தலைப் 'பாம்பு சட்டை கழற்றுதல்' என்று
சொல்வது மரபு. பெறும் + யாக்கை - பெறுமியாக்கை என்று புணர்ந்தது.
''படநாகந்தோலுரித்த பான்மைபோல்,'' என வரும் சிந்தாமணித் தொடர்
(453, 882) இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

 
                       123
மெய்த்துணை யிழுக்கெனத் துறவின் மேன்மையோர்
பொய்த்துணை யென்றுதம் பொறிகள் போழ்குவா
ரத்துணை கடிந்தபின் னனையர் மற்றிவ
ணெத்துணை கொள்பவ ரென்ன வோதுவீர்.
 

''மெய்த் துணை இழுக்கு எனத் துறவின் மேன்மையோர்,
பொய்த் துணை என்று தம் பொறிகள் போழ்குவார்.
அத்துணை கடிந்த பின் அனையர் மற்று இவண்
எத்துணை கொள்பவர் என்ன ஓதுவீர்.


     ''துறவில் மேன்மை உடையவர் தம் உடலின் துணை தமக்கு இழுக்குத்
தருமென்று கருதி, தம் ஐம்பொறிகளையும் பொய்த் துணையாக மதித்து
அறுத்தெறிவர். அத்தகையர் தம்மோடு சேர்ந்துள்ள அந்தத் துணையையே
விலக்கிய பின், இவ்வுலகில் வேறு எத்துணையைக் கொள்ள விரும்புவர்
என்று சொல்லுங்கள்.

     'பொறிகள் போழ்குவார்' என்றது, அப்பொறிகளால் எழும் ஆசைகளை
அகற்றுவார் என்று கொள்க.