பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 143

     'அடைக் கடல்' எனப் பிறவினைப் பொருளில் வினைத்தொகை
இடையே ஒன்று இரட்டி வந்தது. மரை - தாமரை என்பதன் முதற்குறை.
வாழ்க + என = வாழ்கவென என வர வேண்டியது தொகுத்தல் விகாரமாய்
'வாழ்கென' என நின்றது.

 
                 130
இவையெலா மிளந்தவற் கிளம்பி ரானுரைத்
தவையெலாம் வணக்கொடு மமரர் கேட்டலி
னவையெலா மறப்பொலி யும்பர் நாயகி
சுவையெலா மலியவோர் விருந்து தோற்றினாள்.
 

இவை எலாம் இளந் தவற்கு இளம் பிரான் உரைத்து,
அவை எலாம் வணக்கொடும் அமரர் கேட்டபின்
நவை எலாம் அறப் பொலி உம்பர் நாயகி
சுவை எலாம் மலிய ஓர் விருந்து தோற்றினாள்.


     இளந் தவத்தோனாகிய கருணையனுக்குச் சொல்லுமாறு இவற்றை
யெல்லாம் குழந்தை நாதன் உரைத்தான். வானவர் அவற்றையெல்லாம்
வணக்கத்தோடு கேட்டனர். அதன்பின், துன்பமெல்லாம் நீங்கிப் பொலிவு
கொண்ட வானவர்க்கு அரசியாகிய மரியாள் சுவையெல்லாம் நிறைந்த ஒரு
விருந்து தயாரித்தாள்.

     தவன் + கு = தவற்கு தவனுக்கு. 'தவற்கு உரைத்து'' என்பதனைத்
'தவற்கு உரைக்குமாறு உரைத்து' என்று கொள்க.

 
                      131
கன்னலுந் தேறலுங் கனியும் பாலொடு
பன்னலு மரியதோர் பாகுஞ் சேர்த்தியிஃ
தின்னலும் பசியுமாற் றிடுமென் றீந்தன
ளுன்னலு மரிதரு ளுருத்த நெஞ்சினாள்.
 

கன்னலும் தேறலும் கனியும் பாலொடு
பன்னலு அரியது ஓர் பாகும் சேர்த்தி, "இஃது
இன்னலும் பசியும் ஆற்றிடும்" என்று ஈந்தனள்
உன்னலும் அரிது அருள் உருத்த நெஞ்சினாள்.