பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 144

     நினைத்தற்கு அரிய தன்மையாய் அருள் சுரந்த நெஞ்சம் படைத்த
மரியாள் கரும்பும் தேனும் கனிகளும் பாலோடு சொல்வதற்கு அரியதொரு
வெல்லப் பாகும் சேர்த்து அவ்விருந்தைத் தயாரித்து, 'இது துன்பத்தையும்
பசியையும் ஒன்றாகப் போக்கும்' என்று சொல்லிக் கொடுத்தாள்.

 
                    132
தாய்வள ரன்பின்மேற் றயைவ ளர்ந்துகான்
போய்வளர் தவர்க்கெலாந் திலதம் போன்றுராய்
வீய்வளர் கொடியினான் றாழ்ச்சி மேன்மையின்
வாய்வள ருணர்வினை வகுத்துக் கூறினான்.
 

தாய் வளர் அன்பின் மேல் தயை வளர்ந்து, கான்
போய் வளர் தவர்க்கு எலாம் திலதம் போன்று உராய்,
வீய் வளர் கொடியினான் தாழ்ச்சி மேன்மையின்
வாய் வளர் உணர்வினை வகுத்துக் கூறினான்:


     தாயிடம் வளரும் அன்பிலும் மேலாகத் தயவில் வளர்ச்சியுற்று,
காட்டில் போய்த் தவம் வளர்ப்பார்க்கெல்லாம் திலகம் போன்று நடந்து,
மலர்கள் வளர்கின்ற கொடியைத் தாங்கியுள்ள சூசை மாமுனிவன் தனது
தாழ்ச்சிப் பண்பினது மேன்மையின் அடிப்படையில் வளரும் ஓர்
உணர்வைக் கருணையனுக்குச் சொல்லுமாறு வகுத்துக் கூறினான்.

     'வீ' என்ற மலர்ப் பெயர் செய்யுளில் எதுகைப் பொருட்டு 'வீய்' என
நின்றது.

 
              133
மண்ணுறக் கிடந்தநான் வரைவி லாவள
நண்ணுற வெனக்கரு ணாதன செய்தவை
கண்ணுறக் கண்டபின் கலங்கித் தானுளம்
புண்ணுறக் குழைவதோ புலனென் பீரென்றான்.
 
''மன் உறக் கிடந்த நான் வரைவு இலா வளம்
நண்ணுற எனக்கு அருள் நாதன் செய்தவை
கண் உறக் கண்ட பின், கலங்கித் தான் உளம்
புண் உறக் குழைவதோ புலன் என்பீர்'' என்றான்.