பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 145

     ''மண்ணோடு தாழ்ந்து கிடந்த நான் எல்லை இல்லாத புண்ணிய
வளங்களை அடையுமாறு எனக்கு அருளிய ஆண்டவன் தனக்குச்
செய்தவற்றைத் தன் கண்ணாரக் கண்ட பின், தான் மனம் கலங்கிப்
புண்பட்டுக் குழைவது அறிவுடைமை ஆகுமோ என்று அக்கருணை
யனுக்குச் சொல்லுங்கள்'' என்றான்.

 
                    134
இனையன பலவுமன் றிசைத்து மூவரு
நனையன விளமுனிக் காசி நல்கலு
மனையன வுணர்ந்தபல் லமர ரோர்கணம்
புனையன வுடைக்கதிர் பொதுளச் சென்றனர்.
 
இனையன பலவும் அன்று இசைத்து மூவரும்
நனை அன இள முனிக்கு ஆசி நல்கலும்,
அனையன உணர்ந்த பல் அமரர் ஓர் கணம்
புனை அன உடைக் கதிர் பொதுளச் சென்றனர்.

     மூவரும் அந்நாளில் இவை போன்ற பலவற்றையும் சொல்லி அரும்பு
போன்ற இள முனிவனான கருணையனுக்குத் தம் ஆசியை வழங்கினர்.
வழங்கவும், அவற்றையெல்லாம் நன்கு உணர்ந்த பல வானவர் ஒரு நொடிப்
பொழுதில் அழகு செய்ததுபோலத் தம்முடைய கதிரொளி செறியக்
கருணையன்பால் சென்று சேர்ந்தனர்.

                      வானவர் காட்சி

 
                  135
குரவமே பின்னிய கூறை யாலுடல்
கரவமே லுடுத்துமென் கமலப் பாசிதழ்
பரவமே றுயின்றனன் பால னாய்த்தவம்
விரவமே வியர்க்கெலாம் விளக்கொத் தானரோ:
 

குரவமே பின்னிய கூறையால் உடல்
கரவ மேல் உடுத்து, மென் கமலப் பாசிதழ்
பரவ மேல் துயின்றனன், பாலனாய்த் தவம்
விரவ மேவியர்க்கு எலாம் விளக்கு ஒத்தான் அரோ.