பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 147

மூவரும் உணர்த்திய உறுதி முற்றவும்
தூவரும் உணர்வினோன் செவியின் துய்த்த பின்,
மேவு அருங் கருணையாள் விருந்து துய்த்து, உளம்
தே வரும் தெளிவு ஒளி துய்த்துத் தேறினான்.


     தூய்மையாக எழுந்து வரும் உணர்வு கொண்ட கருணையன்
திருக்குடும்பத்து மூவரும் வானவர் மூலம் உணர்த்திய உறுதிச் சொற்கள்
முழுவதும் செவியாற் கேட்டு நுகர்ந்தான். பின், அரிய கருணை
பொருந்தியுள்ள மரியாள் அனுப்பி வைத்த விருந்தை உண்டு நுகர்ந்தான்.
அதனால், தெய்வத்தால் வரும் தெளிந்த அறிவொளியை உள்ளத்தால்
நுகர்ந்து தேறினான்.

 
                        138
தெண்ணிறக் கவினொடு செறிந்த வும்பரு
ளொண்ணிறக் கதிர்முகத் தொருவன் போன்றிரீஇப்
பண்ணிறத் திசைகளைப் பாட வானவர்
விண்ணிறக் களிப்பெழ விரும்பிப் பாடினான்.
 

தெள் நிறக் கவினொடு செறிந்த உம்பருள்
ஒள் நிறக் கதிர் முகத்து ஒருவன் போன்று இரீஇ,
பண் நிறத்து இசைகளைப் பாட வானவர்,
விண்நிறக் களிப்பு எழ விரும்பிப் பாடினான்.


     தெளிந்த ஒளியின் அழகோடு நெருங்கி நின்ற வானவரிடையே
கருணையனும் அவருள் ஒருவன் போன்று ஒளிநிறக் கதிர் முகத்தோடு
இருந்தான். வானவர் யாழின் தன்மையோடு இசைகளைப் பாட, தானும்
வானுலகத்திற்கு உகந்த மகிழ்ச்சி பொங்கி எழ விருப்பத்தோடு பாடினான்.

     எனவே, பின்வரும் பாடல்களில் முன்வரும் இரண்டடியைக்
கருணையனும், பின்னிரண்டடியை வானவரும் பாடியதாகக் கொள்ளலாம்.
இரீஇ - இருந்து.