பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 148

               கருணையன் - வானவர் பாடல்

     -- காய், -- காய், - காய், -- காய் (இடைமடக்கு)

 
                         139
அடல்வண்ணத் தருள்வெள்ள மார்ந்தொழுக மல்கியெழுங்
கடல்வண்ணத் தெவ்வுயிருந் தேற்றறருங் காவலனே
தேற்றறருங் காவலனைச் சேர்ந்தவிர் தன் கமலத்தா
ளேற்றறருஞ் சிந்தையவ ரீங்கிழிவு நண்ணாரே.
 
அடல் வண்ணத்து அருள் வெள்ளம் ஆர்ந்து ஒழுக மல்கி எழும்
கடல் வண்ணத்து எவ் வுயிரும் தேற்றல் தரும் காவலனே.
தேற்றல் தரும் காவலனைச் சேர்ந்து, அவிர் தன் கமலத்தான்
ஏற்றல் தரும் சிந்தையவர் ஈங்கு இழிவு நண்ணாரே.

     கருணையன் : ஆண்டவன் தன் வல்லமைக்கு அளவாக அருள்
என்னும் வெள்ளம் நிறைந்து பாயப் பெருகி எழும் கடலின் தன்மைபோல்
எவ்வுயிர்க்கும் தேறுதல் தரும் காவலன் ஆவான்.

     வானவர் : அவ்வாறு தேறுதல் தரும் காவலனைச் சரணடைந்து,
அவனது ஒளி விடுகின்ற தாமரை மலர் போன்ற திருவடிக்குப் பெருமை
தரும் சிந்தனை உடையவர் இம்மண்ணுலகில் எக்கேடும் அடையார்.

 
                   140
வான்றோய்ந்த மகிழ்வுளனாய் மன்னுயிர்க ளுய்வதற்கே
யூன்றோய்ந்த துயர்கொண்ட வும்பர்தொழுங் கோமானே
யும்பர்தொழுங் கோமானை யுள்ளிநெறி யுட்பிறழா
திம்பர்தொழுஞ் சிந்தையவ ரீங்கிழிவு நண்ணாரே.
 

வான் தோய்ந்த மகிழ்வு உளனாய், மன் உயிர்கள் உய்வதற்கே
ஊன் தோய்ந்த துயர் கொண்ட உம்பர் தொழும் கோமானே,
உம்பர் தொழும் கோமானை உள்ளி, நெறியுட் பிறழாது
இம்பர் தொழும் சிந்தையவர் ஈங்கு இழிவு நண்ணாரே.


     கருணையன் : ஆண்டவன் வானுலகில் தோய்ந்த பேரின்பத்தை
உடையவனாயிருந்தும், மானிட உயிர்கள் உய்வதற்கென்று ஊனுடல் எடுத்துப்
பிறந்தமையால், அதனோடு பொருந்திய துயரங்களைத் தானும் கொண்டான்.
அவனே வானவர் தொழும் அரசனும் ஆவான்.