பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 150

     கரு : விண்ணுலகத்தவர் மகிழுமாறு விண்ணுலகில் தங்கியிருந்த
ஆண்டவன், தான் கொண்டிருந்த அருள் தன் உள்ளத்தை தூண்டவே,
இந்த மண்ணுலகத்தவர் மகிழுமாறு மனிதனானான். அவனே மணிப்
பாத்திரத்தில் நிறைந்துள்ள அமுதம் போன்றவன்.

     வா : மணிப் பாத்திரத்தில் நிறைந்துள்ள அமுதம் போன்ற
அவ்வாண்டவனின் மதி போன்ற குடையின் கீழ் ஒதுங்கிக் கொண்டவராய்,
அன்பை அழகிய அணிகலனாகத் தாங்கிக் கொண்டிருக்கும் அவனது
திருவடியை விட்டு நீங்காதவர் இவ்வுலகில் எக்கேடும் அடையார்.

 
                     143
அவ்வுலகு முவந்தேத்து மான்றகுணத் தொகையோனை யிவ்வுலகு மேத்தாதா லீங்கிழிவு நண்ணாரோ
வீங்கிழிவு நண்ணாரே யிக்கருணைக் கடலோனை
நீங்கிழிவு நண்ணாத நெறிநீங்காச் சிந்தையரே.
 
அவ் வுலகும் உவந்து ஏத்தும் ஆன்ற குணத் தொகையோனை
இவ் வுலகும் ஏத்தாதால் ஈங்கு இழிவு நண்ணாரோ?
ஈங்கு இழிவு நண்ணாரே இக் கருணைக் கடலோனை
நீங்கு இழிவு நண்ணாத, நெறி நீங்காச் சிந்தையரே.

     கரு : அவ்வுலகத்தவர் மகிழ்ந்து போற்றும் ஆண்டவன் சிறந்த
குணங்களையெல்லாம் தொகையாகக் கொண்டிருப்பவன். அவனை
இவ்வுலகத்தவரும் போற்றாதிருப்பின் இங்குக் கேடு அடைய மாட்டாரோ?
அடையவே அடைவர்.

     வா : இவ்வுலகில் கேடு அடையாதவர் யாரெனின், கருணை கடலாகிய
இவ்வாண்டவனை இழத்தலாகிய கேடு அடையா வண்ணம் அறநெறியை
விட்டு விலகாத சிந்தனை உடையவரே ஆவர்.