பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 151

               காட்சியாற் கனிந்த கருணையன்

     -மா, கூவிளம், கூவிளம், கூவிளம்

 
                144
என்று கூறியி ளம்முனி யோடிடை
நின்று வாழ்த்திய வானவர் நீங்கினு
மன்று மாலைம ணத்தணி கோதைபோ
லன்று கானமெ லாமலர் பூண்டதே.
 
என்று கூறி இளம் முனியோடு இடை
நின்று வாழ்த்திய வானவர் நீங்கினும்,
மன்று மாலை மணத்து அணி கோதை போல்
அன்று கானம் எலாம் அலர் பூண்டதே.

     கருணையனோடு நின்று இடையே வாழ்த்திய வானவர்
இளமுனிவனாகிய மேலே காட்டியவாறு முடித்துக் கூறி நீங்கினர். அவர்
மறைந்தாரெனினும், திருமணத்தின்போது மணமண்டபத்தில் மாலை அணிந்து
நிற்கும் பெண்ணைப் போல் அன்று அக்காடு முழுவதும் மலர்களை
மிகுதியாகத் தாங்கி நின்றது.

     'இளமுனி,' என்பது செய்யுளோசைப் பொருட்டு 'இளம் முனி' என
விரித்தல் விகாரமாயிற்று. கோதை - கோதை போன்ற பெண்ணுக்கு ஆகு
பெயர்.

 
                    145
தும்பி தேனொடு தூங்கிசை யாழ்செயக்
கொம்பி லார்குயில் கூவிசை பாடமேற்
பம்பி யார்ந்தபுள் பார்க்கவு வந்துசூ
ழும்பி வான்மயி லாடின வோகையே.
 
தும்பி தேனொடு தூங்கு இசை யாழ் செய,
கொம்பில் ஆர் குயில் கூவு இசை பாட,
மேல் பம்பி ஆர்ந்த புள் பார்க்க, உவந்து சூழ்
உம்பி வான் மயில் ஆடின ஓகையே.

     மனமகிழ்ச்சியால் வண்டுகளும் தேனீக்களும் மெல்லிய யாழ் இசையை
எழுப்பின. கிளைகளில் அமர்ந்திருந்த குயில்கள் கூவி இசை பாடின,
மேற்கிளைகளில் நிறைந்து கிடந்த பறவைகள் இக்காட்சியைப் பார்த்துக்
கொண்டிருந்தன. சிறந்த மயில்கள் மகிழ்ந்து சுற்றிலும் எழும்பி ஆடின.