பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 152

     இவ்வாறு நடனக் காட்சி உருவாகியது, 'உப்பி' என்ற சொல் எதுகைப்
பொருட்டு 'உம்பி' என மெலித்தல் விகாரம் பெற்றது.

 
                       146
கைய டங்கில காந்திமின் போன்றுபுன்
மெய்ய டங்கில பேருயிர் மேலெழீஇப்
பொய்ய டங்கிய வைம்பொறி நீக்கிவா
னைய டங்கிய வாண்டகை நேடுமால்.
 
கை அடங்கில காந்தி மின் போன்று, புன்
மெய் அடங்கில பேருயிர் மேல் எழீஇ,
பொய் அடங்கிய ஐம் பொறி நீக்கி, வான்
ஐ அடக்கிய ஆண்டகை நேடும், ஆல்.

     கருணையனின் பெருமைக்குரிய உயிர், கைக்குள் அடங்காத
ஒளியுள்ள மின்னல் போன்று, தன் சிறிய உடலுக்குள் அடங்காது மேல்
நோக்கி எழுந்து, பொய்யோடு பொருந்திய ஐம் பொறிகளின் துணையை
நீக்கி, வானுலக அழகெல்லாம் அடங்கிய ஆண்டவனைத் தேடும்.

 
               147
பேர்ந்த பேருயி ரைப்பெற வொல்கிநோய்
கூர்ந்த தாயுட னேடிய கொள்கையா
லார்ந்த வாசைய லைந்துள மாடவுண்
ணேர்ந்த நாதனை யெங்கணு நேடுவான்.
 
பேர்ந்த பேருயிரைப் பெற, ஒல்கி நோய்
கூர்ந்ததாய் உடல் நேடிய கொள்கையால்,
ஆர்ந்த ஆசை அலைந்து உளம் ஆட, உள்
நேர்ந்த நாதனை எங்கணும் நேடுவான்.

     தன்னை விட்டுப் பெயர்ந்த பெருமைக்குரிய உயிரை மீண்டும்
பெறவேண்டி, அதன் உடல் ஒடுங்கித் துன்பம் மிக்கதாய்த் தேடிய
தன்மைபோல், கருணையனும் நிறைந்த ஆசையால் அலைந்து தன் உள்ளம்
ஆட, தன் உள்ளத்துள் விரும்பித் தங்கியுள்ள ஆண்டவனை எங்கும்
சென்று தேடிக் கொண்டிருப்பான்.