பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 153

                   148
மழையி னார்ப்பென வண்டிமிர் நீண்டரு
மழையி னீரெனத் தூய்மதுத் தூவலு
மழையி னீலநி றத்தவ னத்திடை
மழையின் மின்னென வந்திரி வானரோ.
 

மழையின் ஆர்ப்பு என வண்டு இமிர் நீள் தரு
மழையின் நீர் எனத் தூய் மதுத் தூவலும்
மழையின் நீல நிறத்த வனத்திடை
மழையின் மின் என வந்திரிவான் அரோ.


     மேகத்தின் முழக்கம் போல வண்டுகள் ஒலிக்கும் நெடிய மரங்கள்
மழைத்துளி போலத் தேனைச் சொரியவும், கருமேகம் போல் நீல நிறமுள்ள
அவ்வனத்தில் மேகத்தில் தோன்றும் மின்னலைப் போலக் கருணையன்
அங்குமிங்கும் வந்து போவான்.

     மழை என்ற சொல் இங்குப் பல பொருள்பட நின்றது - நீலம், கருமை,
பசுமை என்ற மூன்று நிறமும் புலவர் வாக்கில் வேற்றுமையின்றிப் பயின்று
வரும்.

 
                   149
மனத்து ளேயுறைந் தாள்வய நாதனை
வனத்து ளேதொடர்ந் தால்மரு வானெனக்
கனத்து ளேநுழை மின்னிற்க டிந்துளத்
தினத்து ளேதிருத் தாளடைந் தேத்தினான்.
 
மனத்துளே உறைந்து ஆள் வய நாதனை
வனத்துளே தொடர்ந்தால் மருவான் என,
கனத்துளே நுழை மின்னின் கடிந்து, உளத்து
இனத்துளே திருத் தாள் அடைந்து ஏத்தினான்.

     மனத்தினுள் தங்கியிருந்து ஆளும் வலிமை படைத்த ஆண்டவனை
வனத்தினுள் தொடர்ந்து தேடினாலும் அகப்படான் எனக் கருணையன் பின்
உணர்ந்து, மேகத்தினுள் நுழையும் மின்னலைப்போல் அம்முயற்சியைக்
கைவிட்டு, மனத்தின் உணர்வுகளின் துணையால் ஆண்டவன் திருவடியைக்
கண்டடைந்து போற்றினான்.