பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 155

                  152
விண்டின் மாரிவ ரத்தருள் மீவிளைந்
தண்டி யார்ந்துணு மாங்குயிர் வாழ்கினு
முண்டி நாடவு றுப்புத வாப்பசி
மண்டி வாடிய பூவுடல் மாழ்குமால்.
 
விண்டின் மாரி வரத்து அருள் மீ விளைந்து,
அண்டி ஆர்ந்து உணும் ஆங்கு உயிர் வாழ்கினும்,
உண்டி நாட உறுப்பு உதவாப் பசி
மண்டி வாடிய பூ உடல் மாழ்கும் ஆல்.

     மேகம் பொழிந்த மாரிபோல் வரங்களால் தெய்வ அருள் தன் மீது
விளைந்து, அதனை அணுகி மிகுதியாக உண்ணும் அத்தன்மையால்
கருணையன் உயிர் நன்கு வாழ்ந்தது. எனினும், உணவு தேட உறுப்புக்கள்
இன்னும் உதவாமையால் ஏற்பட்ட பசி நெருங்கி, அவனது வாடிய
பூப்போன்ற உடல் மயக்கம் அடையும்.

 
                  153
உய்ய நீண்கிழங் கோடுயர் தீங்கனி
கொய்ய நீரிய குட்டனும் நொய்யதன்
கைய தாலு தவியில காலெலாம்
வெய்ய வானர சாள்விருந் தோம்பினாள்.
 

உய்ய நீண் கிழங்கோடு உயர் தீம் கனி
கொய்ய நீரிய குட்டனும் நொய்ய தன்
கை அதால் உதவி இல கால் எலாம்
வெய்ய வான் அரசாள் விருந்து ஓம்பினாள்.

     உயிர் பிழைப்பதற்கென்று மண்ணுள் நீண்டு புதைந்து கிடந்த
கிழங்கோடு மரத்தில் உயரக் கிடந்த இனிய கனிகளையும் கொய்வதற்கு
நல்லியல்பு வாய்ந்த அச்சிறுவன் மெல்லிய தன் கைகளால் உதவிக் கொள்ள
இயலாத காலமெல்லாம் விரும்பத்தக்க வானரசியாகிய மரியாள் அவனுக்கு
விருந்து தந்து பேணினாள்.

     எனவே, மண்ணுள் மேலுறக் கிடந்த கிழங்குகளையும் தரையில்
விழுந்த அல்லது கைக்கு எட்டக் கூடிய கனிகளையும் அவன் கிடைத்த
போதெல்லாம் எடுத்து உண்டான் என்பது கருத்து. கையது - கையாகிய
அது : கை.