பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 157

                156
வரிவ ளர்ந்தவ னத்திள மாமுனி
யெரிவ ளர்ந்திடர் மாந்தலெந் நாளுமோ
வுரிவ ளர்ந்தவுன் றாளுறச் சேர்க்குதி
சொரிவ ளர்ந்தவ ருட்டொடர்போ யென்றான்.
 
''வரி வளர்ந்த வனத்து இள மாமுனி
எரி வளர்ந்த இடர் மாந்தல் எந் நாளுமோ?
உரி வளர்ந்த உன் தாள் உறச் சேர்க்குதி,
சொரி வளர்ந்த அருள் தொடர் போய்'' என்றான்.

     ''புலிகள் வளர்ந்த காட்டிலே இளம் பிள்ளையாய் இருந்தே பெரிய
முனிவனாய் உள்ள கருணையன் நெருப்புப் போல் வளர்ந்த துன்பங்களை
எந்நாளுமோ அனுபவித்தல் வேண்டும்? மழை சொரிவது போல் வளர்ந்த
அருள் சார்ந்த அன்பு உடையவனே, அவனுக்கு உரிமையாய் வளர்ந்த உன்
அடியோடு பொருந்த அவனைச் சேர்த்துக் கொள்'' என்றான்.

     வளர்ந்த + இடர் = 'வளர்ந்தவிடர்' என வரவேண்டியது தொகுத்தல்
விகாரமாய் 'வளர்ந்திடர்' என நின்றது.

 
                  157
அருளின் காணியி னானரு ளிச்சொலும்
பொருளின் காணிய பொற்பளிக் கின்புறீஇக்
கருளின் காணுமுக் காலைக டந்தொளிர்
தெருளின் காணியி னானிவை செப்பினான்.
 
அருளின் காணியினான் அருளிச் சொலும்
பொருளின் காணிய பொற்பு அளிக்கு இன்பு உறீஇ,
கருளின் காணும் முக் காலை கடந்து ஒளிர்
தெருளின் காணியினான் இவை செப்பினான் :

     இருளாய்க் காணும் முக்காலங்களையும் கடந்து நின்று ஒளிர்கின்ற
தெளிவைத் தன் உரிமைச் சொத்தாய்க் கொண்டுள்ள குழந்தை நாதன்,
அருளைத் தன் உரிமைச் சொத்தாய்க் கொண்டுள்ள சூசை கருணையன்மீது
அருள் கொண்டு சொல்லும் பொருளிற் பொதிந்து கிடந்த சிறந்த
கருணையைக் கண்டு இன்புற்று இவற்றைச் சொல்லலானான் :

     -- காய், -- காய், - மா, தேமா, -- காய்