பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 166

           169
தாயுணர்வாற் கருணையன்றன்
     றலையை யன்னா டரக்கேட்டுத்
தூயுணர்வால் வருந்தினுந்தான்
     மறுக்க றேற்றா தொடர்காமங்
காயுணர்வா னுட்கலங்கிக்
     கொணர்மி னென்னக் கடுங்கசடர்
போயுணர்வாற் பகைத்தமுனி
     தலைகொய் தங்கட் பொறுத்துய்ப்பார்.
 
''தாய் உணர்வால் கருணையன்தன் தலையை அன்னாள் தரக் கேட்டு,
தூய் உணர்வால் வருந்தினும், தான் மறுக்கல் தேற்றா, தொடர் காமம்
காய் உணர்வான் உள் கலங்கி, 'கொணர்மின்' என்ன, கடுங் கசடர்
போய், உணர்வால் பகைத்த முனி தலை கொய்து அங்கண் பொறுத்து
                                          உய்ப்பார்.

     ''அம்மகள் தன் தாயின் தீய விருப்பத்திற்கு இணங்க, கருணையனின்
தலையைப் பரிசாகத் தரக் கேட்டாள். அரசன் தூய உணர்வால் அது செய்ய
வருந்தினா னெனினும், தான் மறுக்க மாட்டாதவனாகி, தொடர்பு கொண்ட
காமத்தினால் வெதும்பும் தீய உணர்வினால் மனம் கலங்கி, 'கருணையன்
தலையைக் கொண்டு வாருங்கள்' என்றான். அவனைக் காட்டிலும்
கசடராகிய சேவகர் போய், அத்தாய் தன் உள்ளத்தால் பகைத்த
முனிவனான கருணை யனின் தலையைக் கொய்து, தட்டில் ஏந்தி அங்கே
கொண்டு வந்து சேர்ப்பார்.

     மறுத்தால் தன் காம வாழ்விற்கு இடையூறாகு மென்று மன்னன்
மறுக்க மாட்டாதவன் ஆயினான்.