பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 177

     தையலும் மூட்டுதலும் என்று ஒன்றும் இல்லாமல், தூய நிறமுள்ள
அன்னமும் மறுவுள்ளது என்று சொல்லத்தக்க சட்டையை அன்னை மரியாள்
தன் கையால்பின்னி, திருமகனை மும்முறை தொழுது அவன்மீது
அணிவித்தாள். தனது பெருங்கருணை என்னும் கதிர் மின்ன, மூவுலகையும்
ஆள்வதற்கு அடையாளமாய் மூன்று முடிகள் அணியும் தகுதி வாய்ந்த
திருமகன் அதனை அணிந்து நின்றான்.

     மெய்ப் பை - உடலுக்கு இடும் பை : சட்டை. இது குறிக்கப்படும்
மற்ற இடங்கள் 9 : 31; 21 : 20.

 
              5
கானுல கலரொடு கதிர்வி ளக்கிய
வானுல குடுவொடு வனைந்த நாயகன்
மீனுல கிரங்கவோர் மிடிகொள் காஞ்சுகந்
தானுல களித்துறித் தரித்துத் தோன்றினான்.
 
கான் உலகு அலரொடு, கதிர் விளக்கிய
வான் உலகு உடுவொடு வனைந்த நாயகன்,
மீன் உலகு இரங்க, ஓர் மிடி கொள் காஞ்சுகம்
தான் உலகு அளித்து உறித் தரித்துத் தோன்றினான்.

     காடு நிறைந்த இம் மண்ணுலகத்து மலர்களோடு, கதிரவன் ஒளி
செய்கின்ற வானுலகத்தை விண்மீன்களோடு உருவாக்கிய ஆண்டவன், தான் இவ்வுலகத்தை மீட்டுக் காக்கவென்று வந்து, வின்மீன் நிறைந்த
வானுலகத்தவர் இரங்குமாறு, வறுமைகொண்ட ஒரு சட்டையை அணிந்து தோன்றினான்.


                       6
உருவளர் மதியொடு மொளிவ ளர்ந்தன
மருவளர் முளரிமெய் வளர்ந்து மெய்ப்பையுந்
தருவளர் வொடுபுதி தன்மை தோன்றின
வெருவளர் முறையிறான் விளிந்த வேலையே,
 
உரு வளர் மதியொடும் ஒளி வளர்ந்து அன,
மரு வளர் முளரி மெய் வளர்ந்து மெய்ப்பையும்
தரு வளர்வொடு, புதி தன்மை தோன்றின
வெரு வளர் முறையில் தான் விளிந்த வேலையே.