பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 180

     அப்போரிலும் தோற்று இகழ்ச்சி கொண்ட பேய்கள், அந்நாடு இழிவு
அடையுமாறு செய்யக் கருதிய யாவற்றையும் திருமகன் சூசையின்
தெளிவுள்ள உணர்வில் முன் உள்ளுறக் காட்டினான். மீண்டும்
வெளிப்படையாக இவற்றைச் சொன்னான்:

     பேய்கள் தள்ளுண்டதும் எள்ளுண்டதும் முன் குணுங்கு மந்திரப்
படலம் (23), சோகு தோர்வைப் படலம் (24) கண்டு தெளிக.

 
               10
புண்டக வெறிக ளோட்டிப்
     புரைபொதிர் நாட்டின் மொய்த்த
கண்டகங் கொய்தே னானே
     கசடறு முணர்வீ னீயு
மண்டக வுழுது சீல
     மலியறம் வித்தி யாரும்
விண்டக வீட்டி னாக்கம்
     விளைவது பேண னன்றே.
 
''புண் தக வெறிகள் ஓட்டி, புரை பொதிர் நாட்டின் மொய்த்த
கண்டகம் கொய்தேன் நானே, கசடு அறும் உணர்வின் நீயும்
மண் தக உழுது, சீலம் மலி அறம் வித்தி, யாரும்
விண் தக வீட்டின் ஆக்கம் விளைவது பேணல் நன்றே.

     ''புண் படுத்திப் பேய்களையெல்லாம் விரட்டி, பாவம் நிறைந்த எசித்து
நாட்டில் மொய்த்துக் கிடந்த முட்களையெல்லாம் நானே வெட்டி எறிந்தேன்.
நீயும் குற்றமற்ற உணர்வு என்னும் ஏரினால் மக்கள் உள்ளமாகிய மண்ணை
நன்றாக உழுது, ஒழுக்கம் நிறைந்த அறமாகிய விதையை விதைத்து, யாவரும்
விண்ணவருக்கு ஏற்ற பேரின்ப வீடாகிய செல்வம் விளைவிக்குமாறு
பேணுதல் நலமாம்.

 
               11
மும்மழை மதியிற் பொய்யா
     முகிலென வருளின் வாய்ந்த
கம்மழை பொழிய நானே
     களிப்புற விளைவு காண்பாய்