பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 185

சூடக மகளி ரொப்பச்
     சொன்னவை பொய்யாச் சீலத்
தீடக மரபோன் வான்வீட்
     டின்புகு மோதி யோர்ந்தான்.
 
நாடக அரசன் ஒவ்வா, நவிக் கனி முட்டி ஒவ்வா,
மாடக ஆணி ஒவ்வா, மடக் கிளி உணர்த்தும் தீம் சொல்
சூடக மகளிர் ஒப்ப, சொன்னவை பொய்யாச் சீலத்து
ஈடு அக மரபோன் வான் வீட்டு இன்பு உகும் ஓதி ஓர்ந்தான்.

     வேடத்தில் ஒத்து வேறு எவ்வகையிலும் ஒவ்வாத நாடக அரசனுக்கும்,
வெளியே அழகிய கனியாய்த் தோன்றி உள்ளே நஞ்சைக் கொண்டிருக்கும்
எட்டிக்கும், யாழின் நரம்புகளுக்கு ஓசையூட்டித் தான் ஓசை பெறாத
முறுக்காணிக்கும் ஒப்பாகாமல் தான் வாயாற் சொன்னவற்றினின்று தவறாத
ஒழுக்கத்தில் ஈடுபடும் உள்ளத்தை இயல்பாகக் கொண்டிருந்த சூசை,
இளங்கிளிக்கு இனிய சொல்லைக் கற்றுத் தரும் வளையல் அணிந்த
மகளிருக்கு நிகராக, மக்களுக்கு வான்வீட்டு இன்பத்தைச் சொரியும்
அறவுரை முறையை உணர்ந்து கொண்டான்.

     கிளி திருந்தச் சொல்லுமட்டும் சலியாத மகளிரைப் போல், சூசையும்
மக்கள் திருந்துமட்டும் சலியாது அறிவுரையை மேற் கொண்டான் என்பது
கருத்து. நவி - 'நவ்வி' என்ற சொல்லின் இடைக்குறை.

 
          18
வாய்ந்தன மணியிற் பூவின்
     மலர்ந்தன விரைசெய் தீந்தேன்
றோய்ந்தன வமுதில் யாருந்
     துய்ப்பன வழுவாச் சீல
மீய்ந்தன வரும்வீட் டின்ப
     மிடுவன கருணை நெஞ்சத்
தாய்ந்தன வெவர்க்குஞ் சூசை
     யறைகுப வலித்தா னன்றோ.
 
வாய்ந்தன மணியின், பூவின் மலர்ந்தன, விரை செய் தீம் தேன்
தோய்ந்தன, அமுதில் யாரும் துய்ப்பன, வழுவாச் சீலம்
ஈய்ந்தன, வரும் வீட்டு இன்பம் இடுவன, கருணை நெஞ்சத்து
ஆய்ந்தன எவர்க்கும் சூசை அறைகுப வலித்தான் அன்றோ.