பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 189

                   24
பாச மாமரும் பரிவுள மின்னணம் பிணித்தே
வாச மாமையின் மதுமலர் மொய்த்தவண் டனைய
காச மாமையிற் காமரு மலர்க்கொடி தயைத்தேன்
வீச மாதவன் விளம்பிய துளத்துண மொய்ப்பார்.
 

பாசமாம் அரும் பரிவு உளம் இன்னணம் பிணித்தே
வாச மாமையின் மது மலர் மொய்த்த வண்டு அனைய
காச மாமையின் காமரு மலர்க் கொடி தயைத் தேன்
வீச மாதவன் விளம்பியது உளத்து உண மொய்ப்பார்.

     பாசத்தோடு கூடிய அரிய அன்பினால் இவ்வாறு மக்களின்
உள்ளத்தைக் கட்டி, பொன்னின் அழகும் ஒளியும் பொருந்திய தன் மலர்க்
கொடி தயவு என்னும் தேனைச் சொரியப் பெருந் தவத்தோனாகிய சூசை
சொல்லியதைக் கருத்தில் கொள்ளுமாறு மணத்தோடு அழகும் பொருந்திய
தேனுள்ள மலரில் மொய்த்த வண்டுகள் போல, மக்கள் அவனிடம் திரண்டு
வருவர்.

 
                        25
அருடி றந்தவா யறைந்தவை யொத்ததோ ரன்பின்
றெருடி றந்தகா தருந்தலிற் றெளிவுகுஞ் சீலப்
பொருடி றந்தகாப் பொறிநெறி விலகிமெய் யுணர்வின்
மருடி றந்தகா வரும்பலர் காட்சியிற் பொலிந்தார்.
 

அருள் திறத்த வாய் அறைந்தவை ஒத்தது ஓர் அன்பின்
தெருள் திறந்த காது அருந்தலின், தெளிவு உரும் சீலப்
பொருள் திறம் தகாப் பொறி நெறி விலகி, மெய் உணர்வின்
மருள் திறம் தகா வரும் பலர் காட்சியில் பொலிந்தார்.


     இவ்வாறு திரண்டு வரும் பலா அருள் திறந்த வாயால் சூசை
கூறியவற்றை அவன் அன்பிற்கு ஒத்ததோர் அன்போடு தெளிவாய்த் திறந்த
தம் காது வழியாக அருந்தினர், அவ்வாறு அருந்திய தெளிவு தரும்
ஒழுக்கப் பொருளின் தன்மைக்குத் தகாத ஐம்பொறிகள் காட்டும் நெறியை
விட்டு விலகி, மெய்யுணர்வினால் மயக்கத்தின் தன்மை சாராத அறிவில்
பொலிவுற்று விளங்கினர்.

     'வரும் பலர்' என்பதை முதலிற் கொண்டு, 'மருள் திறம் தகாக் காட்சி'
என இடைவிட்டுக் கூட்டுக.