பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 190

                       26
ஓரென் பானுல கொருங்குடன் படைத்தபின் னீதிச்
சீரின் பானெறி சிதைவிலா நடவிய நிலையைப்
பாரின் பானலம் படுவகண் டிறைஞ்சலே கல்விப்
பேரின் பானுறும் பெரும்பய னிதுவென வுரைப்பான்.
 

ஓர் என்பான் உலக ஒருங்குடன் படைத்த பின், நீதிச்
சீரின்பால் நெறி சிதைவு இலா நடவிய நிலையைப்
பாரின்பால் நலம் படுவ கண்டு, இறைஞ்சலே கல்விப்
பேர் இன்பான் உறும் பெரும் பயன் இது என உரைப்பான்.


     ஒருவன் எனப்படும் இறைவன் உலகங்கள் யாவற்றையும் ஒரு சேரப்
படைத்த பின், அவற்றை நீதிச் சிறப்போடு நெறி பிறழாமல் நடத்தி வரும்
நிலையை இம்மண்ணுலகில் நலம்பட ஆராய்ந்து கண்டு, அவ்விறைவனை
வணங்குதலாகிய இது ஒன்றே கல்வி என்னும் சிறந்த இன்பத்தால்
அடையக்கூடிய பெரும் பயன் என்று சூசை எடுத்துரைப்பான்.

     'கற்றதனாலாய பயனென்கொல்....' (2) என்று வள்ளுவர் கூறுவதை
ஒப்பு நோக்குக.

 
                   27
நனிய வாவிரு ளுளம்புகா தெளிதலு நயப்ப
வினிய கூறலு மெமர்பிற ரின்றியோம் பலுமுண்
முனிய மாறலு முரிந்தனர் நிறுத்தலு மற்றக்
கனிய சீலமுங் காட்டியோர் பெரும்விளக் கானான்.
 
நனி அவா இருள் உளம் புகா தெளிதலும், நயப்ப
இனிய கூறலும் எமர் பிறர் இன்றி ஓம்பலும், உள்
முனிய மாறலும், முரிந்தனர் நிறுத்தலும், மற்றக்
கனிய சீலமும் காட்டி ஓர் பெரும் விளக்கு ஆனான்.

     மிகுந்த ஆசை என்னும் இருள் உள்ளத்திற் புகாமல் தெளியும்
வகையும், பிறர் விரும்பும்படி இனிய சொற்களைப் பேசும் முறையும்,
எம்மைச் சேர்ந்தவர் பிறர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோரையும்
பேணும் விதமும், உள்ளத்தில் சினம் எழுந்த விடத்து அதனை மாற்றும்
வழியும், நிலைகெட்டவரை அறநெறியால் நிலைநிறுத்தும் தன்மையும், மற்றக்
கனிவான ஒழுக்க முறைகளும் தன்னை அணுகி வந்தோருக்கு எடுத்துக்
காட்டிச் சூசை ஒரு பெரிய விளக்குப்போல் ஆனான்.