பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 194

     ''கொடையினால் வரும் புண்ணியப் பயனை இடையிலே வரும் புகழ்
கவர்ந்து கொள்ளுமென்று உயர்ந்த தன்மையுடையோர் கருதுவர். அதனால்,
தமக்கு உடைமையாக வரும் பொருளைக் கள்வர்க்கு மறைத்து வைக்கும்
தன்மைபோல் மிகுதியாகச் செய்துவரும் கொடையையும் வெளி ஆடம்பரம்
இல்லாமல் மறைத்து ஈவர்.

     ''நீ பிச்சையிடும் பொழுதோ, உன் வலக்கை செய்வதை இடக்கை
அறியா திருக்கட்டும். அப்பொழுது நீ இடும் பிச்சை மறைவாயிருக்கும்;
மறைவாயுள்ளதைக் காணும் உன் தந்தையும் உனக்குப் பிரதிபலன்
அளிப்பார்'' என்ற விவிலியப் பகுதி (மத். 6 : 3 - 4) இங்கு நினைவுகூரத்
தக்கது.

 
                     34
வீழ்ந்த வர்க்குத வியில மேன்மையில்
வாழ்ந்த வர்க்கிடு வார்வயல் பாய்கிலா
வாழ்ந்த நீர்க்கட லண்டிந லங்கெடத்
தாழ்ந்த நீர்ப்புனற் றன்மையி னாயினார்
 
''வீழ்ந்தவர்க்கு உதவி இல, மேன்மையில்
வாழ்ந்தவர்க்கு இடுவார், வயல் பாய்கிலா
ஆழ்ந்த நீர்க் கடல் அண்டி நலம் கெடத்
தாழ்ந்த நீர்ப் புனல் தன்மையின் ஆயினார்.

     ''நிலை கெட்டு விழுந்த வறியவர்க்கு உதவுதலின்றி, மேன்மையாய்
வாழ்ந்தவர்க்குத் தம் பொருளைக் கொடுப்போர், வயலுக்குப் பாய
இயலாமல், ஆழமான நீரை உடைய கடலைச் சேர்ந்து தன் நலம் கெடுமாறு
தாழ்ந்து செல்லும் நீரை உடைய ஆற்றின் தன்மையை உடையவராவார்.

     ''வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம், குறியெதிர்ப்பை நீர
துடைத்து'' என்ற, குறள் (221) இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

 
                      35
வளர்ந்த பூங்கதிர் மாழ்கிய நெற்குயி
ருளர்ந்த வான்புய லூட்டிய நீரெனத்
தளர்ந்த வாழ்க்கையைத் தாங்கியில் லோர்க்கிடுங்
கிளர்ந்த வான்கொடை கேழ்த்தெழு மீகையே.