பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 197

     படம் போல் அழகு செய்கின்ற மலர்த் தடாகங்கள் நிறைந்த அந்தக்
காலிலேய நன்னாட்டிலுள்ள பழமையான ஊர் இம் மண்ணுலகின் முகம்
என்று சொல்லத் தக்கதோ? உலகம் தன் மார்பில் வடமாக அணிந்த
அணிகலன் என்போமோ? அதில் பொருந்தியுள்ள மாணிக்கம் என்போமோ?
உலகத்தின் அழகையெல்லாம் தன் அழகால் அவித்து ஒழிக்கும் பெருமை
வாய்ந்த அழகிய மதில்கள் சூழ்ந்த மாளிகைகளில் தவழும் கொடிகள்
காற்றில் அசைந்து செய்கின்ற நடனம் அழகு தந்து நின்ற நெற்றலி என்னும்
பெரிய நகரம் அந்நாட்டிற்கு ஓர் அணிகலன் ஆகும்.

 
            39
சீர்ச்செல்வத் தருட்செல்வஞ்
     சேர்த்தி யொவ்வாத் திருமிக்கோன்
பேர்ச்செல்வத் தொளிக்கொடைக்கைத்
     தொபீய னென்பான் பிறழாக்கற்
பேர்ச்செல்வத் தன்னமென்பா
     ளீன்ற நம்பி தயோதரனே
நீர்ச்செல்வத் தலரன்னான்
     வளர்ந்தே வாழ்ந்தார் நிகரில்லார்.
 
சீர்ச் செல்வத்து அருட் செல்வம் சேர்த்தி, ஒவ்வாத் திரு மிக்கோன்,
பேர்ச் செல்வத்து ஒளிக் கொடைக் கைத் தொபீயன் என்பான்.
                                   பிறழாக் கற்பு
ஏர்ச் செல்வத்து அன்னம் என்பாள். ஈன்ற நம்பி தயோதரனே.
நீர்ச் செல்வத்து அலர் அன்னான் வளர்ந்தே வாழ்ந்தார் நிகர்
                                   இல்லார்.

     சிறந்த பொருட் செல்வத்தோடு அருட் செல்வத்தையும் ஒன்றாகச்
சேர்த்து, பிறர் செல்வமெல்லாம் தன் செல்வத்திற்கு நிகராகாத பெருஞ்
செல்வம் படைத்தவன்; பெருஞ் செல்வத்தினால் புகழ் பெறும் கொடை
சிறந்த கையை உடையவன்; தொபீயன் என்னும் பெயரை உடையவன்.
அவன் மனைவி தவறாத கற்பு என்னும் அழகிய செல்வம் கொண்ட
அன்னம் என்பவள். அவள் பெற்ற சிறந்த மகன் தயோதரன் என்னும்
பெயரினன். அவன் நீர் வளத்திடையே வளர்ந்த மலர்போல் வளர்ந்து
வர, தமக்கு எவரும் நிகரில்லாத அப்பெற்றோர் இன்பமாக வாழ்ந்தனர்.