பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 199

ணோய்வரம்பா மிடியெவர்க்குஞ்
     செகுத்த பின்னர் நுணித்தகன்று
போய்வரம்பாய் நீனிவைமா
     நகரிற் கைக்கார் பொழிந்திருந்தார்.
 

வீய் வரம்பு ஆம் கோதையினாள் உணர்வில் ஒப்ப, விழைந்து இருவர்
தீய் வரம்பு ஆம் வினை செருக்கும் மறையின் நீழல் செய்து, அங்கண்
நோய் வரம்பு ஆம் மிடி எவர்க்கும் செகுத்த பின்னர், நுனித்து அகன்று போய், வரம்பு ஆய் நீனிவை மா நகரில் கைக் கார் பொழிந்து இருந்தார்.


     மலர்களால் முறையாகத் தொடுத்த மாலை போன்றவளாகிய தன்
மனைவியும் உணர்வில் தன்னை ஒத்திருந்தமையால், அவ்விருவரும்
விருப்பங் கொண்டு, நரக நெருப்பிற்கு எல்லையாகிய தீவினையை அழிக்கும்
வேதம் போல் நிழல் செய்து, நோய்க்கெல்லாம் உச்சவரம்பாகிய வறுமையை
அவ்விடத்துள்ள யாவர்க்கும் போக்கிய பின்னர் பிறரையும் கருதிப் பார்த்து
அங்கிருந்து அகன்றுபோய், நீனிவை என்னும் பெருநகரத்தை எல்லையாய்க்
கொண்டு, தம் கையாகிய மேகத்தினால் கொடையாகிய மழையைப்
பொழிந்து கொண்டிருந்தனர்.

     வீய், தீய் என்பன எதுகை நோக்கி விரித்தல் விகாரம் பெற்றன. நீழல்
- நிழல் என்பதன் நீட்டல் விகாரம் கைக் கார் - உருவகம்.

 
              42
மின்சுடரப் பொழிமுகில்போற்
     புறநாட் டன்னார் விளக்காகிக்
கொன்சுடரப் பொன்புதையா
     விளங்க வீந்த கொடைமிக்கோர்
பொன்சுடரச் சுடுந்தீப்போற்
     பொன்றாத் தேவ பொலிவருளிற்
பின்சுடரப் பலவினையே
     பெற்றார் மாட்சி பிரியாதார்.