பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 205

     தேனைக் குறித்தமையால் 'அணி' மாலை என்பதாயிற்று
'சார்மிப்பாவை' என்பதனை, 'பாவை சார்மியே' என மாற்றிக் கூட்டுக.

 
                   51
காவிநோய் செய்தகண் விழைந்தேழ் காதல
ரோவிநோய் செய்தபே யொருங்கு மாய்த்தலா
னாவிநோய் செய்தபூங் குழலி னங்கையுள்
ளாவிநோய் செய்தழ லருந்தி வாடினாள்.
 
காவி நோய் செய்த கண் விழைந்து ஏழ் காதலர்
ஓவி நோய் செய்த பேய் ஒருங்கு மாய்த்தலால்,
நாவி நோய் செய்த பூங் குழலின் நங்கை உள்
ஆவி நோய் செய் தழல் அருந்தி வாடினாள்.

     கருங்குவளை மலருக்குத் தன் அழகால் துன்பம் செய்த அவள்
கண்ணழகை விரும்பி மணக்க வந்த ஏழு காதலரைத் துன்பம் செய்த பேய்
வருத்தி, ஒருவன் பின் ஒருவனாய் ஒருசேரக் கொன்றமையால், புனுகுக்குத்
தன் மணத்தால் துன்பம் செய்த அழகிய கூந்தலை உடைய சார்மி என்னும்
அப்பெண் தன் உயிருக்குத் துன்பம் தந்த நெருப்பை அருந்தி மனம்
வாடினாள்.

 
                52
வாடிய வொருமகள் வளர்ச்சி கண்டுளங்
கூடிய துயர்க்கிரு குரவர் நாடொறு
நீடிய நசைகொடு நிமல னைத்தொழு
தாடிய சிந்தையி னரற்றி விம்முவார்.
 
வாடிய ஒரு மகள் வளர்ச்சி கண்டு உளம்
கூடிய துயர்க்கு இரு குரவல் நாள்தொறும்
நீடிய நசை கொடு நிமலனைத் தொழுது,
ஆடிய சிந்தையின் அரற்றி விம்முவார்.


     இவ்வாறு வாடிய ஒரே மகள் வயதிலும் வளர்ந்து கொண்டு
போவதைக் கண்டு மனத்திற் பெருகிய துயரத்திற்கு முடிவு காணத் தாய்
தந்தையாகிய இரு பெரியோரும் நீடித்த ஆசையோடு நாள் தோறும்
இறைவனைத் தொழுது, நடுங்கிய மனத்தோடு புலம்பி அழுவார்.