பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 207

                55
செங்கதிர் மதியொடோ ரணையிற் சேர்ந்தன
வங்கதிர் நலாளொடு காளை யாங்குறீஇ
யிங்கெதிர் தோழன்முன் கொணர்ந்த வீரலைப்
பொங்கதிர் வெழப்புகைத் தெரித்துப் போக்கினான்.
 
செங்கதிர் மதியொடு ஓர் அணையில் சேர்ந்து அன,
அம் கதிர் நலாளொடு காளை ஆங்கு உறீஇ,
இங்கு எதிர் தோழன் முன் கொணர்ந்த ஈரலைப்
பொங்கு அதிர்வு எழப் புகைத்து எரித்துப் போக்கினான்.

     பகலன் மதியோடு ஒரு மெத்தையில் சேர்ந்து இருந்தாற்போல அழகிய
கதிர் வீசும் சார்மி நல்லாளோடு காளை போன்ற தயோதரன் அங்குக்
கட்டிலில் உற்று இருந்தான். இங்கு அவனுக்கு எதிரே தோழனாகிய
அசரீயன் முன் மீனைக் கொன்று கொணர்ந்த ஈரலை அப்பேய்க்குப்
பொங்கிய அதிர்ச்சி ஏற்படுமாறு புகைய எரித்து அப்புகையைக் கட்டிற்
பக்கம் செலுத்தினான்.

 
                       56
போக்கிய புகையொடு புழுங்கு பேயின
நீக்கிய நிலையினாங் கெவரு நீர்த்தெழ
வீக்கிய கொடிநல மேய்ந்த காளையுட்
டேக்கிய மகிழ்வறா சிறந்து மூழ்கினான்.
 
போக்கிய புகையொடு புழுங்கு பேய் இனம்
நீக்கிய நிலையின், ஆங்கு எவரும் நீர்த்து எழ,
வீக்கிய கொடி நலம் ஏய்ந்த காளை உள்
தேக்கிய மகிழ்வு அறா சிறந்து மூழ்கினான்.

     அவ்வாறு செலுத்திய புகையோடு சினந்த பேய்க் கூட்டத்தை நீக்கிய
நிலையினால், அங்கு எல்லோரும் மனம் குளிர்ந்து எழுச்சி பெற்றனர்.
மணமகளாய்க் கட்டிக்கொண்ட பூங்கொடி போன்ற சார்மியின் நலத்திற்கு
உரிமை கொண்ட காளை போன்ற தயோதரன் தன் உள்ளத்தில் நிறைவித்த
மகிழச்சி அறாமல் இன்பத்தில் சிறந்து மூழ்கினான்.