பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 208

                மணமக்கள் ஊர் திரும்பல்

 
                  57
இருமணிப் படலையி னிருவர் வாழ்ந்துராய்ப்
பருமணிக் களிப்பினாட் பலவுஞ் சென்றபின்
றிருமணிக் கொடியொடு திரும்பச் செல்வுணர்ந்
தருமணிக் குன்றனா னமைதி கேட்டனன்.
 
இரு மணிப் படலையின் இருவர் வாழ்ந்து உராய்,
பரு மணிக் களிப்பின் நாள் பலவும் சென்ற பின்,
திரு மணிக் கொடியொடு திரும்பச் செல்வு உணர்ந்து
அரு மணிக் குன்று அனான் அமைதி கேட்டனன்.

     இரு வகை மணிகள் இடைபடக் கோத்த மாலைபோல் இருவரும்
வாழ்ந்து நெருக்கமுற்று, பருமையான மாணிக்கத்தைக் கண்டது போன்ற
களிப்போடு நாட்கள் பலவும் கழிந்தபின், அரிய மாணிக்கக் குன்று போன்ற
தயோதரன் அழகிய மணிக்கொடி போன்ற சார்மியோடு தன் ஊருக்குத்
திரும்பச் செல்வதை நினைந்து, அதற்கு விடை கேட்டான்.

 
                           58
விடையொடு வருந்தினுந் தாதை மேவரு
ளிடையொடு வளர்கவென் றிளமின் கூட்டிவான்
கொடையொடு வளர்ந்தசீர் குவித னன்புரி
நடையொடு வேண்டுவ வெறுப்ப நல்கினான்.
 
விடையொடு வருந்தினும் தாதை, ''மேவு அருள்
இடையொடு வளர்க'' என்று இள மின் கூட்டி, வான்
கொடையொடு வளர்ந்த சீர்குவி தன் அன்பு உரி
நடையொடு வேண்டுவ வெறுப்ப நல்கினான்.

     தந்தையாகிய நிவலன் விடை கொடுத்துப் பிரிவது பற்றி
வருந்தினாலும், ''இறைவனின் மேவிய அருள் இடையே நிற்க நீங்கள்
வளர்வீர்களாக'' என்று வாழ்த்தி, இள மின்னல் போன்ற சார்மியைத்
தயோதரனோடு கூட்டி, தன் சிறந்த கொடையினால் வளர்ந்த செல்வத்தைத்
தன் திரண்ட அன்புக்கு உரிய தன்மையோடு வேண்டியவற்றையெல்லாம்,
இனி வேண்டாமென்று வெறுக்குமளவிற்குக் கொடுத்தான்.