பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 209

                       59
பறவையு நிழலுமா யும்முட் பற்றுறீஇ
யுறவையு மறக்கினு முவந்தில் லோர்க்கெலாங்
கறவையு மிகவருட் காமி னென்றன
னறவையு மணத்தையு நவிழ்பைந் தாரினான்.
 
''பறவையும் நிழலுமாய் உம்முள் பற்று உறீஇ,
உறவையும் மறக்கினும், உவந்து இல்லோர்க்கு எலாம்
கறவையும் மிக அருள் காமின்'' என்றனன்
நறவையும் மணத்தையும் நவிழ் பைந் தாரினான்.

     தேனையும் மணத்தையும் பொழியும் பசுமையான மாலையை
அணிந்துள்ள நிவலன் அவர்களை நோக்கி, ''பறவையும் அதன்
நிழலும்போல் உம்மிடையே பிரியாத அன்பு பூண்டு, உறவினரை
மறந்தாலும், வறியவரை மறவாமல் அவர்க்கெல்லாம் மகிழ்ந்து தந்து,
கறவைப் பசுவைக் காட்டிலும் மிகுதியான அருளோடு காப்பாற்றுங்கள்''
என்றான்.

 
               60
தூம்புடைக் கையமா துரகஞ் சாடுயர்
கூம்புடைத் தேர்தசங் கொடிகு டைக்கொடு
தேம்புடை யலங்கல்வேற் சேனை சூழ்வர
வீம்புடை மரபினோர் விரைவிற் போயினார்.
 
தூம்பு உடைக் கைய மா, துரகம், சாடு, உயர்
கூம்பு உடைத் தேர், தசம், கொடி, குடை கொடு
தேம் புடை அலங்கல் வேல் சேனை சூழ் வர,
வீம்பு உடை மரபினோர் விரைவின் போயினார்.

     துளையுள்ள கையை உடைய யானை, குதிரை, வண்டி, உயர்ந்த
கூம்பை உடைய தேர். பல்லக்கு, கொடி, குடை இவற்றைக் கொண்டு
தேனைப் பொழியும் மாலை அணிந்து வேலைத் தாங்கிய சேனை சூழ்ந்து
வர, பெருமையுள்ள குடியைச் சார்ந்த அவ்விருவரும் அசரீயனோடு
விரைந்து தம் ஊர் நோக்கிப் போயினர்.