பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 210

              அன்னத்திற்குத் தொபீயன் அறிவுரை

     -- காய், -- காய், - மா, தேமா

 
               61
பண்ணடையா லாடலெனப் பரிவற் றிங்க
ணுண்ணடையா லுவப்பிலிவை யொழுகுங் காலைப்
புண்ணடையான் மகற்கவண்டாய் புலம்பி நோகப்
பெண்ணடையா லுண்மயங்கிப் பெரிது நைந்தாள்.
 

பண் நடையால் ஆடல் எனப் பரிவு அற்று இங்கண்
உள் நடையால் உவப்பில் இவை ஒழுகும் காலை,
புண் நடையால் மகற்கு அவண் தாய் புலம்பி நோக,
பெண் நடையால் உள் மயங்கிப் பெரிது நைந்தாள்:


     பாடலின் இயல்பிற்கு ஏற்ப இயங்கும் நடனம் போல இங்கே
முகலிமாபுரத்தில் துயர் அற்று உள்ளத்தோடு பொருந்திய மகிழ்ச்சியோடு
இவையெல்லாம் நிகழ்ந்து வருகையில், அங்கு நீனிவை நகரில் தயோதரனின்
தாய் புண்பட்ட தன்மையாய்த் தன் மகன் பொருட்டுப் புலம்பி நொந்து,
பெண்ணென்ற இயல்பிற்கு ஏற்ப உள்ளம் மயங்கிப் பெரிதும் குழைந்தாள்.

 
                  62
பொருளிழந்தே மகனிழந்தே புலம்ப நீகண்
டெருளிழந்தே யிதோகொடையின் செய்கை யென்றா
ளருளிழந்தே சொல்லலென வழுந்தொ பீயன்
மருளிழந்தே கலங்காதான் மறுத்துச் சொன்னான்.
 
'பொருள் இழந்தே மகன் இழந்தே புலம்ப நீ கண்
தெருள் இழந்தே, இதோ கொடையின் செய்கை?'' என்றாள்,
''அருள் இழந்தே சொல்லல்'' என அழும் தொபீயன்,
மருள் இழந்தே கலங்காதான், மறுத்துச் சொன்னான்:

     ''பொருளை இழந்தும், மகனை இழந்தும், நீ கண்ணின் தெளிவு
இழந்தும் நாம் புலம்ப, இதுவோ நமது கொடையின் செயலால் விளைந்த
பயன்?'' என்றாள். ''தெய்வ அருளையும் இழந்ததுபோல் பேசாதே'' என்று
அழும் தொபீயன், மன மயக்கம் நீங்கிக் கலங்காதவனாய், அவள் சொல்லை
மறுத்துப் பின்வருமாறு சொன்னான்: