| 63 |
அறமொன்றே
பயன்பேதா யஞர்தீ தல்ல
மறமொன்றே வினைகாணாய் வழங்கு மன்பின்
றிறமொன்றே நயம்பீடை சேர்த்தி யீவான்
புறமொன்றே யொவாக்கருணைப் பொலிவோ னென்றான். |
| |
''அறம் ஒன்றே
பயன், பேதாய், அஞர் தீது அல்ல.
மறம் ஒன்றே வினை, காணாய். வழங்கும் அன்பின்
திறம் ஒன்றே; நயம் பீடை சேர்த்தி ஈவான்
புறம் ஒன்றே ஒவாக் கருணைப் பொலிவோன்,'' என்றான். |
''பேதைப்
பெண்ணே, அறம் ஒன்றே பயன் உள்ளது. துன்பம் தீமை
அன்று. பாவம் ஒன்றே தீங்கு. இதனைக் கண்டுகொள். இறைவன் வழங்கும்
அன்பின் தன்மை ஒன்றே; வெளித்தோற்றத்தில் ஒரு விதத்திலும் ஒவ்வாதது
போல் தோன்றும் கருணையாலே பொலிந்து நிற்கும் இறைவன் இன்பத்தைத்
துன்பத்தோடு கலந்தே தருவான்'' என்றான்.
| 64 |
மைத்திறத்தா
னொந்தழுவ தெளிதே வாடு
மெய்த்திறத்தா லிறப்பெளிதே விளைநோய் தந்த
கைத்திறத்தாற் றேறியுளங் காய்ந்த துன்ப
மத்திறத்தா லின்பமென்ப தரிதே யென்றான். |
| |
''மைத் திறத்தால்
நொந்து அழுவது எளிதே; வாடும்
மெய்த் திறத்தால் இறப்பு எளிதே. விளைநோய் தந்த
கைத் திறத்தால் தேறி, உளம் காய்ந்த துன்பம்
அத் திறத்தால் இன்பம் என்பது அரிதே'' என்றான். |
''துன்பத்தைக்
கண்டு மயக்க உணர்வால் நொந்து அழுவது எளிதே;
வாடும் உடலின் தன்மையால் இறப்பதும் எளிதே. விளைந்த நோயைத்
தனக்குத் தந்த இறைவனின் கைத் திறத்தை நினைந்து தேறி, தன்
உள்ளத்தை வெதுப்பிய துன்பத்தை அந்த முறைப்படி இன்பம் என்று
கொள்வதே அரிய செயல்'' என்றும் சொன்னான்.
|