பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 217

அளவில்லாது கொண்டு சேர்த்தான். புலம்பிக் கொண்டிருந்த உனக்கு
இரண்டு கண்களையும் குணமாக்கித் தந்தான். இத்தகைய ஒருவனுக்குப்
பொருந்தக் கொடுப்பதோர் பதில் உதவி உண்டோ? எனினும், கொண்ட
செல்வத்தில் பாதியைக் கொடுத்து வணங்குக'' என்றான்.

     பொடித்தல் - முளைத்தல் - அதன் வினையெச்சம் 'பொடிக்க' என
வரற்பாலது, எதுகை ஒலி நயம் கருதி, 'பொடிய' என நின்றது.

 
                  72
கோதையாய் விரைசெய் மார்பற்
     கூய்மினென் றவனும் வந்தான்
றாதைவா யமிர்த மூறத்
     தன்கையான் முன்கை பற்றிக்
காதைவாய் மடங்கச் செய்தாய்
     கடிப்புக ழிங்கண் வித்தி
மேதைவாய்ப் பெருஞ்சீர்
     வான்மேல் விளைத்திமற் றறிய நானே.
 

''கோதைவாய் விரை செய் மார்பன் கூய்மின்'' என்று, அவனும் வந்தான்
தாதை வாய் அமிர்தம் ஊறத் தன் கையால் முன்கை பற்றி,
''காதை வாய் மடங்கச் செய்தாய்; கடிப் புகழ் இங்கண் வித்தி,
மேதை வாய்ப் பெருஞ்சீர் வான் மேல் விளைத்தி, மற்று அறிய நானே?

     தந்தை தொபீயன், ''மாலையினின்று மணம் பரப்பும் மார்பை
உடையவனாகிய அசரீயனை அழையுங்கள்'' என்று சொல்ல, தயோதரன்
போய் அழைக்க, அசரீயனும் வந்தான். தொபீயன் தன் வாயில் அமிர்தம்
ஊற தன் கையால் அவனது முன்கையைப் பற்றிக் கொண்டு சொல்வான்,
''பேசும் வாய் மூடத்தக்க வகையில் கதை போல் இவையெல்லாம் செய்து
முடித்தாய். இவ்வுலகில் மிகுந்த புகழை விதைத்து, வானுலகில் மேன்மை
வாய்ந்த அருட் செல்வத்தையும் உனக்கு விளைவித்துக் கொண்டாய். வேறு
நான் எவ்வகையாய் இதனை அறிந்து சொல்லத் தகுவேனோ?

     மார்பன் + கூய்மின் - இரண்டாம் வேற்றுமைத் தொகைப் பொருளில்
'மார்பற் கூய்மின்' என வந்தது. இப்பாடல் அடுத்த பாடலோடு நிறைவு
பெறும் குளகச் செய்யுளாதலின் 'சொல்வான்' என ஒரு சொல் வருவித்து
உரைக்கப்பட்டது.