பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 218

                 73
அடிப்பணி செய்க நாமே
     யரும்பொரு ளோடு முய்த்த
கடிப்பணி பகுந்தோர் பாகங்
     கைக்கொள்க வென்னப் போற்றிக்
கொடிப்பணி யுலவு மார்பன்
     குளிர்ப்பவோர் முறுவல் காட்டித்
துடிப்பணி மொழியாற் சொன்னான்
     சுருதிநூ லமிர்த வாயான்.
 

''அடிப் பணி செய்க நாமே. அரும் பொருளோடும் உய்த்த
கடிப் பணி பகுந்து ஓர் பாகம் கைக் கொள்க'' என்னப் போற்றி,
கொடிப் பணி உலவு மார்பன் குளிர்ப்ப ஓர் முறுவல் காட்டி,
துடிப்புஅணி மொழியால் சொன்னான் சுருதி நூல் அமிர்த வாயான்:


     ''நாங்கள் உனது திருவடிகட்கு தொண்டு செய்வோம். மேலும், அரிய
செல்வத்தோடு நீ கொண்டு சேர்த்த திருமண அணிகலன்களை இரண்டாகப்
பகுந்து ஒரு பாகத்தை நீ ஏற்றுக் கொள்வாயாக'' என்று கூறித் தொபீயன்
வணங்கினான். கொடி படர்ந்தாற் போல் அணிகள் தவழும் மார்பை
உடையவனாகிய அசரீயன் அவர்கள் மனம் குளிருமாறு ஒரு புன்முறுவல்
காட்டி, வேத நூல் விளங்கும் தனது அமிர்த வாயால் துடிப்புள்ள அழகுச்
சொற்களால் பின் வருமாறு சொல்லத் தொடங்கினான்:

 
             74
உருக்கொடு தோன்றி நானே
     யுருவிலா வானோ னின்பப்
பெருக்கொடு தேவ பாதம்
     பெற்றவி ரபயே லென்பேன்
மருக்கொடு மலர்ந்த பூப்போல்
     வளரருட் கொடையின் பாலாற்
றிருக்கொடு புகழ்நீ யெய்தச்
     செலுத்தினா னென்னை நாதன்.