பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 22

                           36
பிரிந்த தோர் நிலம் பெறக் கொடும் போர்முகத் திறப்பத்
தெரிந்த வீரரைச் செலுத்தலே கொடிதல தென்பார்
விரிந்த கோலொடு நாடுகொள் வழுவறச் சிலவீங்
கிரிந்த சீறுயி ரிறத்தலே கொடிதென்பார் கொல்லோ.
 
"பிரிந்தது ஓர் நிலம் பெறக் கொடும் போர்முகத்து இறப்பத்
தெரிந்த வீரரைச் செலுத்தலே கொடிது அலது என்பார்;
வரிந்த கோலொடு நாடு கொள் வழு அறச் சில ஈங்கு
இரிந்த சீறுயிர் இறத்தலே கொடிது என்பார் கொல்லோ?

      "ஒரு மன்னன் தன் நாட்டினின்று பிரித்தெடுக்கப்பட்ட ஒரு நிலப்
பகுதியை மீண்டும் பெறக் கருதிக் கொடிய போர் முனையில் இறக்குமாறு
தெரிந்தெடுத்த வீரரைச் செலுத்துதலே கொடியதன்று என்பார்.
வரையறுக்கப்பட்ட ஆட்சியும் நாடும் அடையவிருக்கும் ஒரு கேடு
நீங்குமாறு இந்நாட்டில் இருந்த சில சிற்றுயிர்கள் இறத்தல் கொடிது
என்பார்களோ?

      வீரரோடு ஒப்பு நோக்குகையிற் குழந்தைகள் சிற்றுயிர் ஆயின;
நாட்டு மக்களோடு மொத்தமாக நோக்குகையிற் சில ஆயின, கொல்லோ
என்றவிடத்துக் 'கொல்' என்ற இடைச்சொல் அசைநிலை, 'ஓ' வினா.
'இருந்த' என்பது எதுகை நோக்கி "இரிந்த' எனத் திரிந்தது.

 
                     37
பகைத்த வெம்பசி பரிந்தற மலையொழிந் தொழுகி
முகைத்த பன்மலர் முருக்கிய நீத்தமுங் கொடிதோ
துகைத்த தீதறச் சொன்னவை விடுதியே லையா
தகைத்த வாழ்வோடு தாங்கர சிழந்தனை யென்றான்.
 
"பகைத்த வெம் பசி பரிந்து அற மலை ஒழிந்து ஒழுகி
முகைத்த பல் மலர் முருக்கிய நீத்தமும் கொடிதோ?
துகைத்த தீது அறச் சொன்னவை விடுதியேல், ஐயா,
தகைத்த வாழ்வொடு தாங்கு அரசு இழந்தனை!" என்றான்.

      "உயிர்களுக்குப் பகையாகிய கொடிய பசி அற்று ஒழியும் வண்ணம்
மலையினின்று பாய்ந்து வழியிலே பூத்த பல மலர்களையும் அழித்து வந்த
வெள்ளம் கொடியதாகுமோ? ஐயனே, நம்மை வருந்திய தீமை விலகுமாறு
நான் சொன்னவற்றைப் புறக்கணிப்பாயேல், தகுதி வாய்ந்த நல்வாழ்வோடு
தாங்கியிருக்கும் அரச பதவியையும் இழந்தவன் ஆவாய்!" என்று மாதியன்
உரையை முடித்தான்.