பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 222

     வறுமை வந்தவிடத்துத் தளராமலும் செல்வம் விளைந்த விடத்துப்
பெருமை கொள்ளாமலும் ஒரே தன்மையாய் இருந்த பெற்றோரும் மகனும்
இவ்வுலகிடத்து இணையற்ற அன்பினால் எவர்க்கும் உண்டாகும் குறைகளை
நீக்கி, மிகுந்த தன்மையாத் தாம் அடைந்த செல்வ வாழ்க்கையால்
கனியக்கூடிய பொதுநலம் நன்றாக அமையும்படி பிறர்க்கு இனிமையோடு
பகுத்துக் கொடுத்து, இடியைத் தன்னிடத்தே கொண்டுள்ள மழையும்
தீயதென்று சொல்லத்தக்க வகையில் வாழ்ந்தனர்.

     இன்சொல்லோடு இவர் கொடுக்கும் நயத்தால், இடியோடு கொடுக்கும்
மழை தீயதாயிற்று.

 
              79
கொடைதரும் பயனே யிஃதேற்
     குளித்தகாற் கெடுமென் றீந்து
மிடைதரும் பொருளி னாக்க
     மேவுமி னென்றான் சூசை
கடைதரு மளவற் றன்னார்
     களிப்புற விரப்போர் வாழ்க
மடைதரு நிறைவிற் றானம்
     வழங்குநல் லுணர்விற் றேர்ந்தார்.
 

''கொடை தரும் பயனே இஃதேல், குளித்த கால்கெடும் என்று ஈந்து,
மிடை தரும் பொருளின் ஆக்கம் மேவுமின்'' என்றான் சூசை,
கடைதரும் அளவு அற்று அன்னார் களிப்பு உற, இரப்போர் வாழ்க
மடைதரும் நிறைவில் தானம் வழங்கும் நல் உணர்வில் தேர்ந்தார்.

     சூசை கதையை முடித்து, ''கொடை தரும் பயன் இத்தகைய தெனவே,
செல்வம் ஒளித்து வைத்தவிடத்துக் கெடுமென்று உணர்ந்து பிறர்க்குக்
கொடுத்து, திரண்டு கிடக்கும் பொருளைக் கொண்டு ஆக்கம் தேடிக்
கொள்ளுங்கள்'' என்றான். கேட்ட யாவரும் முடிவு காணும் அளவு இன்றி
மகிழ்ச்சி கொள்ளவும், அதன் மூலம் இரப்போர் வாழ்வு பெறவும்.
மடையைத் திறந்து தரும் நிறைவு போன்று தானம் வழங்கும் நல்லுணர்வில்
தெளிவு பெற்றனர்.

     செல்வத்திற்கு ஆக்கமாவது, கொடையால் புண்ணியம் சேர்த்தலும்,
அதன் பயனாகச் செல்வம் வளர்தலுமாம்.