பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 224

                    82
பேதை வாய்மொழி கேட்டுளி பேரருட்
கோதை வாய்மொழி மாதவன் கூறினான்
காதை வாய்மொழி கண்ணியு ளங்கெட
மேதை வாய்மொழி வேதம தென்பவோ.
 
பேதை வாய்மொழி கேட்ட உளி, பேரருள்
கோதை வாய்மொழி மா தவன் கூறினான்:
''காதை வாய்மொழி கண்ணி உளம் கெட,
மேதை வாய்மொழி வேதம் அது என்பவோ?

     அறிவிலியாகிய அவன் வாய்ச் சொல்லைக் கேட்டபோது, பெருங்
கருணையை மாலையாக அணிந்த பெருந் தவத்தோனாகிய சூசை உண்மை
மொழியைப் பின்வருமாறு உரைத்தான்: ''கதையை உண்மை மொழியாகக்
கருதி உள்ளம் கெட்டபின், சொல்பவன் அறிவாளியாயினும், அவன் வாயிற்
பிறந்த சொல்லை, வேதவாக்கு அது என்று கொள்ளலாமோ?

     வாய்மொழி - வாய் + மொழி என வாயிற் பிறந்த சொல்லையும்,
வாய்மை + மொழி என உண்மை மொழியையும் உணர்த்தும், 'கேட்டுளி'
என்பது தொகுத்தல் விகாரம்.

 
                   83
பிறப்ப தும்பிறந் தாரெவ ரும்பின
ரிறப்ப தும்பொது வன்றியி றந்தபின்
புறப்ப டும்புரம் புக்குமு னாயவை
மறப்ப துந்தவிர்ந் தார்வகுத் தாரென்றான்.
 
''பிறப்பதும், பிறந்தார் எவரும் பினர்
இறப்பதும் பொது அன்றி, இறந்த பின்
புறப் படும் புரம் புக்கு, முன் ஆயவை
மறப்பதும் தவிர்ந்து, ஆர் வகுத்தார்?'' என்றான்?

     ''மனிதர் யாவரும் ஒரு தடவை பிறப்பதும் பின்னர் அவ்வாறு
இறப்பதும் பொதுவான நியதியே அல்லாமல், இறந்தபின் முன் உடலுக்குப்
புறமான உடலுள் புகுந்து, முற்பிறப்பில் நிகழ்ந்தவற்றை மறவாமல் எடுத்துரைத்தவர் யார்?'' என்று சூசை கேட்டான்.