பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 225

                   84
முன்பி றந்தனர் முற்றிறந் தாரெனிற்
பின்பி றந்தீலர் முன்பெறுந் தீவினை
யென்பி றந்தபி னெவ்வழி வீயுமென்
றன்பி றந்தசி னத்தவன் கூறினான்.
 
''முன் பிறந்தனர் முற்று இறந்தார் எனின்,
பின் பிறந்திலர் முன் பெறும் தீவினை
என் பிறந்த பின், எவ்வழி வீயும்?'' என்று
அன்பு இறந்த சினத்து இவன் கூறினான்.

     அதனைக் கேட்ட சிவாசிவன், ''முன் ஒரு பிறப்பிற் பிறந்தவர்
முற்றிலும் இறந்து அதனோடு ஒழிந்தனர் என்று கொண்டால், பின் பிறப்பு
எடுக்காத அவர்கள் முற்பிறப்பில் பெறும் தீவினைகள் என்ன நிகழ்ந்த
பின், எவ்வழியில் அழியும்?'' என்று அன்பு நீங்கிய சினத்தோடு
வினவினான்.

 
                     85
மருள்வி ளைத்தவ ழுக்குரை கேட்டலுந்
தெருள்வி ளைத்த திருவிளக் காயினா
னருள்வி ளைத்ததன் னன்பொடு நூன்மறைப்
பொருள்வி ளைத்தப யன்புகன் றானரோ.
 
மருள் விளைத்த வழுக்கு உரை கேட்டலும்
தெருள் விளைத்த திரு விளக்கு ஆயினான்
அருள் விளைத்த தன் அன்பொடு நூல் மறைப்
பொருள் விளைத்த பயன் புகன்றான் அரோ:

     மயக்க உணர்வு விளைவித்த தவறான சொல்லைக் கேட்டதும்,
தெளிந்த உணர்வுகளை விளைவித்த திரு விளக்குப் போன்றவனாகிய
சூசை கருணை விளைவித்த அன்போடு வேத நூற் பொருள் விளைவித்த
பயனைச் சிவாசிவனுக்குக் கூறத் தொடங்கினான்:

 
                    86
வினைமு திர்ந்துவி ளிந்தன ராவிபோய்
முனைமு திர்ந்தவ ழன்முதிர் பூதியிற்
கனைமு திர்ந்தப னிப்பொடெக் காலமும்
புனைமு திர்ந்தசி றைபுகுந் தோவுமால்.