பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 226

''வினை முதிர்ந்து விளிந்தனர் ஆவி போய்,
முனை முதிர்ந்த அழல் முதிர் பூதியில்,
கனை முதிர்ந்த பனிப்பொடு, எக்காலமும்,
புனை முதிர்ந்த சிறை புகுந்து ஓவும் ஆல்.


     ''தீவினையே முதிர்ந்து இறந்தவர் உயிர் உடலிலிருந்து பிரிந்து போய்,
தீக்கொழுந்தின் முனை முதிர்ந்த நெருப்பு மிகுந்த பூமியாகிய நரகத்தில்,
அலறல் நிறைந்த நடுக்கத்தோடு, விலங்கு நெருக்கிய சிறையில் புகுந்து
எக்காலமும் வருந்திக் கொண்டே யிருக்கும்.

 
               87
செய்த நற்றவ வாட்கொடு தீவினை
கொய்த பின்னிறந் தாவிகு ளிர்த்தருள்
பெய்த நெஞ்சுபெ யர்கில பேரின்ப
மெய்த வாண்டகை கண்டென்றும் வாழுமால்.
 
''செய்த நல் தவ வாள் கொடு தீவினை
கொய்த பின் இறந்த ஆவி குளிர்த்து அருள்
பெய்த நெஞ்சு பெயர்கில பேரின்பம்
எய்த ஆண்டகை கண்டு என்றும் வாழும் ஆல்.

     ''தாம் செய்த நல்ல தவம் என்னும் வாளைக் கொண்டு தீவினைப்
பயனை அறுத்தெறிந்த பின் இறந்தவர்தம் உயிர், ஆண்டவன் குளிர்வித்து
அருளைப் பொழிந்த தம் நெஞ்சு பெயராத பேரின்பம் அடையுமாறு
மோட்சம் சென்று, ஆண்டவனை முகமுகமாகக் கண்டு எக்காலமும் வாழும்.

     ஆவிக்கு இறப்பில்லையாதலின், 'இறந்த ஆவி' என்றது 'இறந்தவர்
ஆவி' எனக் கொள்ளப்பட்டது. அது 'இறந்தாவி' என நின்றது
தொகுத்தல் விகாரம்.

 
                  88
இருவ கைப்படு மிவ்வுயிர் விட்டிடை
வருவ கைப்படு மற்றுயிர் தன்வினை
யொருவ கைப்படு மொப்பனைத் தீயுல
கருவ கைப்படு மல்லலில் வீயுமால்.