பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 228

     ''பொன்னைக் கலப்பு நீக்கி விளக்கிய வேளையில் அக்கொல்லர்
அதைக் கொண்டு மின்னும் ஒளி பரப்பிய மெல்லிய அணிகலன் செய்வது
போல, தீது நீங்கி இனிய ஒளி பரப்பிய அவ்வுயிர் எம் பெருமானின்
நிலைத்த ஒளி பரப்பிய மார்பின் கண் அணிகலனாக விளங்கும். 'ஆடா
நிலை அறத்து என் மார்பில் தேம்பாவணியாவான், (3 : 57) என்று
முனிவர் குறிப்பிடுவதும் காண்க.

 
                    91
சொன்ன முற்கதி கள்கடை தோன்றிலா
வின்ன பிற்கதி யீறுள தாயிறந்
தன்ன தீயுறை யவ்வுயிர்க் கீங்குநம்
பன்ன லாட்சியிற் பாசறை குன்றுமால்.
 

''சொன்ன முன் கதிகள் கடை தோன்று இலா
இன்ன பின் கதி ஈறு உளதாய், இறந்து
அன்ன தீ உறை அவ்வுயிர்க்கு ஈங்கு நம்
பல் நல் ஆட்சியின் பாசறை குன்றும் ஆல்.


     ''முதலிற் சொன்ன மோட்ச நரகக் கதிகள் முடிவு தோன்றுதல்
இல்லாதவை, பின் சொன்ன இந்த உத்தரிக்கும் கதியோ முடிவு உள்ளதாய்,
இறந்த பின் அந்த நெருப்பில் தங்கியுள்ள அவ்வுயிருக்கு இங்கு நாம்
செய்கின்ற பலவகை நற்செயல்களால் துன்பம் குறைவதும் ஆகும்.

     ''பாவங்களினின்று விடுதலை பெறும்படி இறந்தவர்களுக்காக
வேண்டிக் கொள்வது புனிதமும் பயனுமுள்ள எண்ணமாம்'' (ப. ஏ., 2 மக்.
12 : 46).

 
                   92
அரிய வேதவெட் டெட்டுமெண் ணாமகத்
துரிய விவ்வழி யொன்றல தில்லையாற்
பிரிய மாண்டுயிர் பின்புபி றத்தலே
கரிய கங்குல்க னாவென வோதினான்.