பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 230

     சிவாசிவன் சூசையை நோக்கி, ''ஒரே பிறப்பென்று நீ கூறிய இந்நிலை
உண்மையாயின், சிலருக்கு நலம் குன்றிய உடலும் சிலருக்கு உடல் அழகும்,
சிலருக்குச் செல்வக் குறைவும், சிலருக்குச் செல்வ வாழ்வுமாய் மாறி
இந்நிலை உலகத்தில் வழங்கியபோது, (இவையெல்லாம் முற்பிறப்பின்
வினைப்பயன் என்று கொள்ளாவிடின்) இந்நிலை நீதியாகுமோ,
குற்றமாகுமோ? சிறந்தவனே, இந்நிலை தெளியுமாறு கூறுவாய்'' என்று
கேட்டான். அறிவு தெளிந்த ஆர்வத்தில் தோய்ந்த இனிய மனநிலையும்
தேன் போன்ற சொல்லும் மலர்க்கொடியும் உடைய சூசை மீண்டும் அதற்கு
உரிய வேத நூல் முறையைப் பின்வருமாறு எடுத்துரைத்தான்:

     'தேறிய' - 'தேற' என்று பொருள்படும் 'செய்யிய' என்னும் வாய்பாட்டு
வினையெச்சம்.

 
                                 94
ஆதியிலா வீறுமீலா வினையின்றி யென்றுமுளோ
     னமல னொன்றே
பேதியிலா வானவரு மெம்முயிரும் படைப்புண்ட
     பின்னீ றில்லா
ஓதியிலா மற்றுயிர்கள் முதலீறுள் ளனவென்ன
     வுரிநூ லீதாய் நீதியிலா நவையுறுமுன் முதற்படைப்பெம் முயிர்கொண்ட நிலைமை யென்னோ.
 
''ஆதி இலா, ஈறும் இலா, இணை இன்றி என்னும் உளோன் அமலன்
                                        ஒன்றே.
பேதி இலா வானவரும் எம் உயிரும் படைப்புண்ட பின் ஈறு இல்லா,
ஓதி இலா மற்று உயிர்கள் முதல் ஈறு உள்ளன என்ன உரி நூல் ஈது
                                        ஆய்,
நீதி இலா நவை உறும் முன் முதல் படைப்பு எம் உயிர் கொண்ட
                                              நிலைமை என்னோ?

     ''இறைவன் ஒருவனே தனக்குத் தொடக்கமும் இல்லாது, முடிவும்
இல்லாது, ஒப்பும் இல்லாது என்றும் இருப்பவன், வேற்றுமை இல்லாது,
வானவர் உயிரும் எம்போன்ற மனிதர் உயிரும் படைக்கப்பட்டுத்
தொடக்கம் கொண்டபின் முடிவு இல்லாதவை. பகுத்தறிவு இல்லாத மற்ற
உயிர்களோ தொடக்கமும் முடிவும் உள்ளன என்று மதிப்பிற்கு உரிய
வேதநூல் கூறும் உண்மை இதுவாய் இருக்க, நீதிக்கு முரணான பாவம்
தோன்று முன்னே எம் போன்ற மனித உயிர்கள் முதற்படைப்பில் உடல்
கொண்ட தன்மை எவ்வாறு ஏற்பட்டதோ?