பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 231

     வினைப் பயனுக்கு ஏற்ப உயிர்கள் உடலெடுத்துப் பிறக்குமாயின்,
வினையும் அதன் பயனும் இல்லாத முதல் உடல் எவ்வாறு ஏற்பட்டது என்ற
வினா, வினைப் பயனின் விளைவாக உடலெடுத்து பிறந்து இறந்து உழலும்
சுழற்சியை மறுப்பதற்கென்று இங்கு எழுப்பப்படுகின்றது.

 
                    95
''பார்முகத்து முதலுடல்புக் கெம்முயிர்க டோன்றியகாற்
     பரிவற் றெல்லாச்
சீர்முகத்து வாழரசர் யாவருங்கொல் பன் முகத்துச்
     சென்றா ரென்னிற்
பேர்முகத்து வயத்திறையோ னீதியதோ நீதியதேற்
     பிறழா நீதி
யோர்முகத்து முன்வினைக ளின்றியின்று மிவ்விகிர்த
     முளதா மென்றான்.
 
''பார் முகத்து முதல் உடல் புக்கு எம் உயிர்கள் தோன்றிய கால்
                              பரிவு அற்று எல்லாச்
சீர் முகத்து வாழ் அரசர் யாவரும் கொல் பல் முகத்துச் சென்றார்?
                              என்னில்,
பேர் முகத்து வயத்து இறையோன் நீதி அதோ? நீதி அதேல்,
                              பிறழா நீதி
ஓர் முகத்தும்முன் வினைகள் இன்றி இன்றும் இவ்விகிர்தம் உளது
                              ஆம்'' என்றான்.

     ''இவ்வுலகில் எம் போன்ற மனித உயிர்கள் முதல் உடலுக்குள்
புகுந்து தோன்றிய போது, துன்பமே இல்லாமல், எல்லாச் செல்வத்தோடும்
வாழும் அரசராகவே யாவரும் பல திசையிலும் சென்று பரவினரோ?
அப்பொழுதும் வேற்றுமை இருந்ததென்று கொண்டால், அது புகழோடு
எதுவும் செய்ய வல்லமையும் கொண்டுள்ள ஆண்டவனுக்கு நீதி ஆகுமோ?
அது நீதியென்றால், ஒருவகையாலும் முன் வினைகள் இல்லாமலே இன்றும்
இவ்வேற்றுமை காணப்படுதல் அவனுக்குத் தவறாத நீதியே ஆகும்'' என்று
சூசை விடையிறுத்தான்.