பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 232

     'சென்றார் கொல்' எனவும், 'பிறழா நீதி ஆம்' எனவும் சொற்களைக்
கொண்டு கூட்டுக. ''எல்லோரும் பல்லக்கு ஏறினால், பல்லக்குச் சுமப்பவர்
யார்?'' என்ற பழமொழி உலகியலிற் காணும் இவ்வேற்றுமைப் பயனை
உணர்த்துவதாகும்.

 
                    96
முற்பிறப்பின் விடங்கமுறத் தலைவிதிகா ரணமென்றான்
                          முன்பா னீதி
தற்பிறப்பி னன்புயர்ந்தோன் வேறுபட விதியெழுதுந்
                          தயவே தென்னச்
சொற்பிறப்பி னடங்காதான் றிருவுளமே யெனவன்னான்
                            சூசை மீண்டே.
பிற்பிறப்பின் வீற்றியற்றுந் திருவுளமுந் தானென்றாற்
                          பிழையோ வென்றான்.
 
''முன் பிறப்பின் விடங்கம் உறத் தலைவிதி காரணம்'' என்றான்.
                                   ''முன்பால் நீதி
தன் பிறப்பின் அன்பு உயர்ந்தோன் வேறு படவிதி எழுதும் தயவு
                                   ஏது?'' என்ன,
''சொல் பிறப்பின் அடங்காதான் திரு உளமே'' என அன்னான்,
                                   சூசை மீண்டே,
''பின், பிறப்பின் வீற்று இயற்றும் திரு உளமும் தான் என்றால்
                                   பிழையோ? என்றான்.

     சிவாசிவன் மறுப்பாக, 'முதல் பிறப்பில் இவ்வாறான வேற்றுமை
காணப்பட்டதற்கு இறைவன் அவனவன் தலையில் எழுதிய விதியே
காரணம்'' என்றான். சூசை, ''முதல் இயல்பாக நீதியிலும் அதன் உடன்
பிறப்பாகிய அன்பிலும் உயர்ந்தவனாகிய ஆண்டவன் அவனவனுக்கும்
வேறுபட விதி எழுதும் தயவு எந்த வகையிலே சேர்ந்தது?'' என்று
வினாவினான். சிவாசிவன், ''அவ்வாறு எழுதுவது சொல்லினின்று பிறந்த
பொருள் விளக்க எல்லைக்குள் அடங்காதவனாகிய ஆண்டவனின்
திருவுளச் செயல். அதைக் கேட்க நாம் யார்?'' என்றான். சூசை மீண்டும், ''அப்படியானால், ஒரே பிறப்பில் வேறுபாடுகள் தோன்றப் படைக்கும் திருவுளமும் அதுவே என்று கொண்டால் பிழையாகுமோ?'' என்றான்.

     எனவே, படைப்பிற் காணும் வேற்றுமைக்குக் காரணம்
தலைவிதியென்று கொண்டால் இறைவன் நீதிக்கும் அன்பிற்கும்
பொருந்தாதென்பது, இறைவன் திருவுளம் என்று கொண்டால், அதற்குப்
பல பிறப்பு வேண்டுவதில்லை என்பதும் கருத்து.