பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 234

''தெருள் செல்வம் மிக்க இறையோன் முள் திலத்தும் பெய் முகில்
                              போல் சிந்திப் பெய்த
பொருள் செல்வம் வறிது என்னப் பூரியர்க்கும் சால்பு இறைப்பான்;
                              பொருவா மாட்சி
அருள் செல்வம் நசைக்கு அளவாய் யாவரும் கைக்கொண்டு ஓங்க
                              வயமே தந்தான்.
மருள் செல்வம் மற்றவையும் ஆகியதும் அறப் பயனோ,
மதியின்
                              மிக்கோய்?


     
''அறிவு மிக்கவனே, தெளிந்த ஞானம் என்னும் செல்வம் மிக்க
ஆண்டவன், முள் நிறைந்த காட்டிலும் மழை பெய்யும் மேகம் போல், தான்
பொழிந்து கொடுத்த பொருளாகிய செல்வம் வீணானது என்ற முறையில் கீழ்
மக்களுக்கும் மிகுதியாக வாரி இறைப்பான்; ஒப்பற்ற மாண்புள்ள அருட்
செல்வத்தையோ ஆசைக்கு அளவாக யாவரும் கைக்கொண்டு சிறக்கும்
படியான வலிமை தந்தான். அப்படியிருக்க, மயக்கம் தரும் பொருட்
செல்வமும் மற்றச் சிறப்புக்களும் ஒருவனுக்கு உண்டாகியதும் அவன்
முற்பிறப்பில் செய்த அறத்தின் பயனென்று சொல்லலாமோ?

     ''அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட் செல்வம் பூரியார்
கண்ணும் உள'' என்ற குறள் (241) ஒப்பு நோக்கத் தக்கது, 'மிக்கிறையோன்'
என வந்தது தொகுத்தல் விகாரம். தில்லம் - காடு. அது 'திலம்' என
நின்றது இடைக்குறை.

 
                        99
சலத்தெல்லா மோர்நிலையோ தருக்கெல்லா மோர்கனியோ
                          தரணி யெங்கு
நிலத்தெல்லா மோர்விளைவோ நமக்கெல்லா மோர்முகமோ
                          நிலையும் பல்லாய்க்
குலத்தெல்லாம் பொதுநின்று குன்றாச்சீ ரறமொன்றே
                          குறையொன் றின்றிப்
புலத்தெல்லா மாகுமெனிற் புறவிகிர்த மொன்றெண்ணார்
                          புலமை மிக்கோர்.