பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 238

     நுமான் சிவாசிவனைப் பிடித்து இழுத்துத் தரையோடு அழுத்தி,
அவன் திருதிரு வென்று விழிக்க, ''இதற்குப் பெயர்தான் விதி, அடா!''
என்றான். பின்னும், அவனை அடிமேல் அடியாக அடித்துக் காலால்
உதைத்து, ''இது உன் தலைவிதி, அடா!'' என்றான். மேலும், அவனை
விலாவில் இடித்து, அவன் அழக் கண்டு, ''நீ அழாதே; இதுவும் விதி,
அடா!'' என்றான். சூழ நின்றோரெல்லாம் இது கண்டு வெடிக்கச் சிரித்தனர்;
தலைவிதிக் கொள்கையின் கொடுமையை உணர்ந்து, ஆகாதென அதனை
விலக்கிக் கொண்டனர்.

     தலைவிதிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால், பகை பழி பாவம்
என்ற பேச்சிற்கெல்லாம் இடமில்லை என்பது கருத்து. இது செயலிற் காட்டிய
அறவுரை என்க.

 
                      104
கூன்முகத் தடும்விதிக் கொடுமை யீதெனத்
தான்முகத் தொருநகை தருஞ்சி வாசிவ
னூன்முகத்து உரைத்தவை நுதலித் தேற்றரும்
பான்முகத்து ஒரு மொழிபகர்வ கேளென்றான்.
 
கூன்முகத்து அடும் விதிக் கொடுமை ஈது எனத்
தான் முகத்து ஒரு நகை தரும் சிவாசிவன்,
''நூல் முகத்து உரைத்தவை நுதலி, தேற்று அரும்
பால் முகத்து ஒரு மொழி பகர்வ கேள்'' என்றான்:

     கோணல் தன்மையாய் வந்து தாக்கும் விதிக் கொள்கையின்
கொடுமை இது என்று உணர்ந்து தானும் தன் முகத்தில் ஒரு புன்னகை தந்து
நின்ற சிவாசிவன், ''நான் கற்ற நூல்களில் சொல்லியவற்றைக் கருத்திற்
கொண்டு, நீ சொல்லியவற்றைக் கேட்டுத் தெளிவு பெறுவதற்கு அரிய
தன்மையால், நான் இன்னும் ஒரு வார்த்தை சொல்லக் கேள்'' என்றான்:

     சூசையின் கொள்கையைத் தாக்குமென்று கருதிக் கைக்கொண்ட விதி
தன் உடலையே தாக்கியது அதன் கோணல் தன்மை ஆயிற்று.

 
               105
ஏற்றரு முணர்வினோ யியைந்த நூனலோர்
போற்றரு மூழ்வினை யெனப்பு கன்றபின்
மாற்றருந் தலைவிதி மறுப்ப வோவென்றான்
றேற்றரு மயிர்ப்பற வளனுஞ் செப்பினான்.