பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 24

      ஏலியன் "மற்ற உயிர்களைத் தன் உயிராக மதித்துப் பேணுவதன்
அடையாளமாக ஒளியை உமிழ்கின்ற மணிமுடியை அணிந்துள்ள மன்னன்,
தன் உயிருக்குக் குற்றம் விளையுமென வீணே ஐயங்கொண்டு, அதனைத்
தவிர்ப்பதற்காகப் பல மனித உயிர்களைக் கொல்லுதலோ குற்றமற்ற
செயல்?" என்று வினவினான்.

     அய்யம் - ஐயம் என்ற சொல்லின் போலி. மன் உயிர் - நிலைபெற்ற
உயிர்; மனித உயிர். இறந்த பின்னும் நிலைபெறும் ஆன்மா மனித
உயிர்க்கே உண்டென்பது கிறிஸ்தவக் கொள்கை.

 
                      40
போழ்வினை யாயினு முடிபு ரந்திடத்
தாழ்வினை யுண்டெனச் சாற்று வாருண்டோ
வாழ்வினைப் பிறர்க்களித் தரசன் வாழ்வுறக்
கீழ்வினை யிலையெனக் கிசலன் கூறினான்.
 
"போழ் வினையாயினும் முடி புரந்திடக்
தாழ் வினை உண்டு எனச் சாற்றுவார் உண்டோ?
வாழ்வினைப் பிறர்க்கு அளித்து அரசன் வாழ்வு உறக்
கீழ்வினை இலை" எனக் கிசலன் கூறினான்.

      கிசலன் என்பவன், "ஆட்சியைக் காப்பாற்றுவதற்கு, ஒருவனது
உடலைப் பிளந்து உயிரைக் கொல்லும் செயலாகவே இருப்பினும், அது
இழிந்த செயல் ஆதல் உண்டு எனச் சொல்வார் உண்டோ? அரசன்
பிறர்க்கு வாழ்வைக் கொடுத்துத் தானும் வாழ்வதற்குச் செய்யும்
எவ்வினையும் கீழ் வினை ஆதல் இல்லை" என்று மறுப்புக் கூறினான்.

 
                 41
கண்ணிலா னோவியம் வரைந்த காதைபோ
லெண்ணிலா விளைஞனென் றிசைத்தி நீயென
வொண்ணிலா வரசடி யிறைஞ்சி யோதியின்
றெண்ணிலா வேலியன் மீண்டு செப்பினான்.
 
"கண் இலான் ஓவியம் வரைந்த காதைபோல்,
எண் இலா இளைஞன் என்று இசைத்தி நீ" என
ஒள் நிலாவு அரசு அடி இறைஞ்சி ஓதியின்
தெள் நிலாவு ஏலியன் மீண்டு செப்பினான்: