பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 25

      கற்ற கல்வியின் தெளிவு பொருந்திய ஏலியன் கிசலினி நோக்கி,
"கண் இல்லாதவன் சித்திரம் வரைந்தானென்ற கதைபோல், எண்ணிப்
பார்க்கும் திறமில்லாத இளைஞனென்ற தன்மையால் நீ இவ்வாறு
சொன்னாய்" என்று கடிந்து கூறி, ஒளி பொருந்திய அரசனது அடியை
வணங்கி மீண்டும் பேசலானான்:

      காதை - 'கதை' என்பதன் நீட்டல் விகாரம்." ஓதி - ஓதி உணர்ந்த
அறிவு.

 
               42
மண்ணள வொளிப்புகழ் மருவு மன்னவ
கண்ணள வறிவுளோர் கதைத்த மாசுரை
யெண்ணள விழிவுறு மென்று கேட்கிலா
விண்ணள வொளிமறை விளம்பக் கேட்டியால்
 
"மண் அளவு ஒளிப் புகழ் மருவு மன்னவ,
கண் அளவு அறிவு உளோர் கதைத்த மாசு உரை
என் அளவு இழிவு உறும் என்று கேட்கிலா,
விண் அளவு ஒளி மறை விளம்பக் கேட்டியால்.

      "மண்ணுலகத்தின் அளவாகப் புகழொளி பொருந்தியுள்ள மன்னனே,
கண் கண்ட அளவான புல்லறிவு படைத்தோர் கதைபோல் அழகுபடுத்திக்
கூறிய மாசுள்ள சொல்லை மதிக்கும் அளவிற்கு இழிவு வந்தடையும் என்று
கருதிஅவற்றைக் கேளாமல், விண்ணளவான ஒளிபடைத்த வேதப்பொருளை
நான் சொல்லக் கேட்பாயாக.

      'ஒளிப் புகழ்' என்பதனைப் 'புகழொளி' என்று மாற்றுக. 'கண் அளவு'
அறிவுளோர் கண் கண்டதற்கு மேல் அறமும் மறமும் எண்ணிப்பாராத
புல்லறிவாளர் என்க. கேட்கிலா - 'கேட்கிலாது' என்பதன் ஈறு கெட்ட
எதிர்மறை வினையெச்சம்.

 
                  43
வையகத் தொருவனாய் வாய்ந்த முத்தொழிற்
செய்யகத் திணையிலான் சிறந்த வன்பொடு
பொய்யகத் துறுஞ்செயிர் போக்க மைந்தனாய்
மெய்யகத் துறுந்திறன் மறையின் மெய்மையே.