பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 240

                     107
தீட்டிய விதியலாற் செயப்ப டாசெயுங்
கோட்டிய வினைவிதிக் கோட்ட மாமலால்
வாட்டிய மனஞ்செயும் வடுவ தோவிவ்வா
றீட்டிய வறமற மிரண்டி லாமரோ.
 
''தீட்டிய விதி அலால், செயப்படா செயும்
கோட்டிய வினை, விதிக் கோட்டம் ஆம் அலால்,
வாட்டிய மனம் செயும் வடு அதோ? இவ்வாறு,
ஈட்டிய அறம் மறம் இரண்டு இல் ஆம் அரோ.

     ''எழுதிய விதிப்படி அல்லாமல், வேறு விதமாகச் செய்யப் படாது
செய்விக்கும் கோணலான செயற்பாடு, விதிக் கொள்கையின் கோணல்
ஆகுமே அல்லாமல், அது வாட்டமுற்ற மனம் தன் செயலாகச் செய்யும்
குற்றம் ஆகுமோ? இவ்வாறு, ஒருவன் தானே தேடிக்கொண்ட புண்ணியம்
பாவம் என்ற இரண்டும் இல்லையென்று ஆகும்.

 
                      108
இவ்விதி யிலையென வியம்பு மூழ்வினை
மெய்வ்விதி மறையினால் விளங்க, மாக்களைச்
செவ்விதி யிறைவன்முன் சிருட்டித் தாயகா
லுய்வ்விதி யிழந்தவர்க் குற்ற தோதுவாம்.
 
''இவ் விதி இலை என இயம்பும் ஊழ்வினை
மெய் விதி மறையினால் விளங்க மாக்களைச்
செவ் விதி இறைவன் முன் சிருட்டித்து
ஆய கால் உய் விதி இழந்தவர்க்கு உற்றது ஓதுவாம்:

     ''இவ்விதமான தலைவிதி என்று ஒன்று இல்லை என்று கொண்டு
கூறும் ஊழ்வினையின் தன்மை மெய்யான விதிகளை உடைய வேதத்தின்
மூலம் விளங்கும்படி, மனிதரைச் செவ்வையான திட்டப்படி இறைவன்
முதலில் படைத்து வைத்த காலத்தில், உய்யும் விதியை இழந்து போன
அவர்களுக்கு நேர்ந்ததை எடுத்துச் சொல்வோம்: