பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 241

                 109
உருமணிக் குன்றனா னொருவ னாணலாற்
றருமணிக் கொடியனா டெரிவை யாக்கினோ
னிருமணிப் படலையி னிருவர்ச் சேர்த்தலர்
மருமணிச் சோலைகண் வைத்து வாழ்கென்றான்.
 

''உரு மணிக் குன்று அனான் ஒருவன் ஆண் அலால்,
திரு மணிக் கொடி அனாள் தெரிவை ஆக்கினோன்,
இரு மணிப் படலையின் இருவர்ச் சேர்த்து, அலர்
மரு மணிச் சோலைகண் வைத்து, 'வாழ்க' என்றான்.


     ''அழகிய மாணிக்கக் குன்று போன்றவனாகிய ஆண்மகன் ஒருவனே
யல்லாமல், அழகிய மணிக் கொடி போன்றவளாகிய ஒரு பெண்ணையும்
படைத்த ஆண்டவன், இரு வகை மாணிக்கங்களாலான கொத்துமாலை
போல் அவ்விருவரையும் கணவன் மனைவியாகச் சேர்த்து, பூவின் மணம்
கமழும் அழகிய சோலையில் இருக்க வைத்து, 'இன்பமாய் வாழ்வீராக'
என்றான்.

     ஆண் : ஆதாம்; பெண் : ஏவாள். இது முதல் தொடர்ந்து வரும்
இவர் செய்தி ப. ஏ., ஆதி. முதல் மூன்று அதிகாரங்கள் காண்க.
வாழ்கென்றான் - தொகுத்தல் விகாரம். அனான், அனாள் - இடைக்குறை.

 
                110
காதன்மிக் கிமிழெலாங் கலந்த வாழ்க்கையுண்
டாதன்மிக் காண்டகைக் கிறைய தாகவே
காதன்மிக் குறுமெனத் தகைத்த வோர்கனி
நாதன்மிக் குரைத்துணா நனிவி லக்கினான்.
 
''காதல் மிக்கு, இமிழ் எலாம் கலந்த வாழ்க்கை உண்டு,
ஆதல் மிக்கு, ஆண்டகைக்கு இறை அது ஆகவே,
'சாதல் மிக்கு உறும்' எனத் ததைத்த ஓர் கனி
நாதன் மிக்கு உரைத்து, உணா நனி விலக்கினான்.

     ''காதலும் மிகுந்து, இன்பமெல்லாம் கலந்த வாழ்க்கையை அனுபவித்து,
ஆகும் வரங்களும் மிகப் பெற்று, ஆண்டவனுக்குக் குடிக்கடன் அதுவே
என்ற தன்மையாக, 'சாதலும் மிகுந்து பிற துன்பங்களும் வந்தடையும்'