பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 244

''கழீஇயின மணி நலாய், கலங்கல். தேன் துளி
தழீஇயின இக்கனி அருந்தின், சாவு இலாது,
எழீஇயின உணர்வு உறீஇ, இறைவர் மானுவீர்
குழீஇயின வரத்து' எனக் கூளி கூறிற்றே.


     ''பேய் அவளை நோக்கி, 'கழுவியெடுத்த மாணிக்கம் போல்
அழகுள்ளவளே, கலங்காதே, தேன் துளி பொதிந்துள்ள இக்கனியை
அருந்தினால், சாவு இல்லாமல் உயர்ந்த அறிவும் அடைந்து, திரண்ட
வரங்களால் தேவர்களுக்கு ஒப்பாவீர்கள்' என்று கூறிற்று.

     ஒருத்தி பேசிக் கொண்டிருக்கையில் 'மானுவீர்' என்று பன்மையாக்கி,
ஆதாமையும் வளைத்துக் கொண்ட பேயின் பேச்சுத் திறம் காண்க.
'கழீஇயின' போன்றவை சொல்லிசை அளபெடை.

 
                 115
கண்வழி புக்கவாக் கழுமி யக்கனி
பண்வழி மொழியினாள் பரிந்துண் டாளது
தண்வழி யிமிழலாற் சாவி லாதுமற்
றொண்வழி யாடவற் குய்த்துண் மோவென்றாள்.
 

''கண் வழி புக்கு அவா கழுமி அக் கனி
பண் வழி மொழியினாள் பரிந்து உண்டாள். அது
தண் வழி இமிழ் அலால் சாவு இலாது, மற்று
ஒண் வழி ஆடவற்கு உய்த்து, 'உண்மோ' என்றாள்.


     ''ஆசை கண் வழியாகப் புகுந்து பெருகி, இசை வழியும் மொழியை
உடைய அப்பெண் அந்தக் கனியைப் பறித்து உண்டாள். அது குளிர்ச்சி
வழியும் இன்பம் தந்ததேயல்லாமல் சாவு தராமையால் தேறி, மற்றொரு
கனியை ஒளி வழியும் தோற்றமுள்ள ஆடவனுக்கு நீட்டிக் கொடுத்து, 'நீயும்
உண்' என்றாள்.

     உண்மோ - 'மோ' முன்னிலையசை

 
                      116
கனிமுகங் கண்டுழி வெருவிக் காந்தைதன்
பனிமுகங் கண்டுழிப் பரிவுற் றேங்கினான்
றுனிமுகங் கண்டபேய் துறக்கின் மாதிறீஇத்
தனிமுகங் காண்டியென் றுளத்திற் சாற்றிற்றே.